சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என முஸ்லிம் லீக் தென் மண்டல தலைவி ஃபரீதா அப்துல் காதர் வலியுறுத்தி உள்ளார். இது பற்றிய அறிக்கையில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்து கொண்டு வருகிறது. சிறுமிகளை பாலியல் வன் கொடுமை செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்று தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டத்தை, தமிழகத்துக்கு பொருந்தும் வகையில், தமிழக அரசு திருத்தம் செய்தது.
அதன்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்வது, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது ஆகிய குற்றங்களுக்கு கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் எனவும், பெண்கள் மீது ஆசிட் வீசினால் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் எனவும், பெண்களை பின் தொடர்ந்து கேலி செய்தால் அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யும் மசோதாவை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
தற்போது சென்னை தாம்பரம் அடுத்துள்ள சானடோரியத்தில், தமிழக சமூக நலத்துறை சார்பில் நடத்தப்படும் அரசு சேவை இல்லத்தில் தங்கி பயின்று வரும் 13 வயது சிறுமியை, அங்கு காவலாளியாக பணிபுரிந்து வரும் மேத்யூ என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். எனவே மரண தண்டனை வழங்கப்படும், பாலியல் வன் கொடுமை குற்றத்திற்கான சிறுமிகளின் வயது வரம்பை, 12 லிருந்து 15 ஆக உயர்த்த வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தமிழக அரசாங்கம் மரண தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென் மண்டல தலைவி ஃபரீதா அப்துல் காதர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.