இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -15

( கி.பி 1299-1922)

தைமூர் தங்கள் படைகளுக்கு முன்னாள் ஆழமான குழி தோண்ட உத்தரவிட்டார்.

குழிகளுக்கு முன்னே எருதுகளின் கழுத்திலும், கால்களிலும் தோல்பட்டைகளை கட்டி நிற்க வைக்க உத்தரவிட்டார்.

பின்னர் ஒட்டகங்களின் முதுகில் மரங்களையும் காய்ந்த புல்லையும் ஏற்றி அவற்றையும் ஒன்றாக கட்டி வைக்கவும் ஏற்பாடு செய்தார்.

முதலில் யானைப் பாகர்களை குறிவைத்து அம்பு எய்ய வில்படை வீரர்களுக்கு தைமூர் உத்தரவிட்டு இருந்தார்.

ஓரிரு நாட்கள் தைமூரின் படை நன்றாக ஓய்வெடுத்தது. டெல்லி படைகள் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தன.

திடீரென தளபதி மல்லு கானின் தலைமையில் டெல்லி படைகள் தடதடத்து கோட்டையை விட்டு வெளியில் வந்தன.

மல்லு கானின் படையில் யானைப்படையை நடுவில் வைத்து காலாட்படை முன்னால் வந்தது.

இந்தக் காட்சிகளை உயரமான பாறைக் குன்றிலிருந்து பார்த்து கொண்டிருந்த தைமூர் கீழே இறங்கி விரிப்பை விரித்து தொழுதார். வெற்றிக்காக துஆசெய்தார்.

தைமூர் தனது வில்படை வீரர்களை டெல்லி படையின் வலது பக்கத்தை குறிவைத்து விற்களை எய்ய சொன்னார்.

மல்லுகான் தனது இடதுபுறத்திலிருந்த வீரர்களை தைமூரின் வலது பக்கமிருந்த வீரர்களை குறிவைத்து அம்பு எறிய சொன்னார்.

இருப்பினும் தைமூரின் வீரர்கள் குறிதப்பாமல் தொடர்ந்து எறிந்த அம்புகளால் டெல்லியின் வலதுபக்க படை பலத்த சேதமடைந்தது.

டெல்லியின் யானைப்படைகள் முன்னேறி வர தைமூரின் வீரர்கள் சஞ்சலமடைந்தனர்.

தைமூர் தனது வீரர்களை மரக்கட்டைகளும் காய்ந்த புல்லும் வைத்து கட்டப்பட்டிருந்த ஒட்டகங்களை முன் கொண்டு வரச்செய்து காய்ந்த புற்கள் மீது தீ வைக்க உத்தரவிட்டார்.

திடீரென ஏற்பட்ட தீபிழம்புகளையும், எருதுகளில் கட்டப்பட்டு இருந்த தோள்களையும் பார்த்த யானைகள் மிரண்டன. எருதுகளுக்கு முன்னால் தோண்டப்பட்ட குழிகளை கண்டு யானைகள் முன்னேற பயந்தன.

தீ பிழம்புகளோடு ஒட்டகங்கள் யானை முன்பு வரவே யானைகள் பயந்து தங்களது படைகளுக்கு இடையை புகுந்து ஓடின. டெல்லியின் படை சீர்குலைந்தது.

வலது முனையிலிருந்த தளபதி பீர்முகம்மது டெல்லி வீரர்களின் தலையை சீவிக்கொண்டே முன்னேறினார்.

தைமூரின் பேரர் கலீல் ஒரு யானையை பிடித்து வந்து தைமூரின் முன் நிறுத்தினார்.

தைமூர் தனது தளபதி குர்ராகானுக்கு போரின் உத்திரவிடும் பொறுப்பை கொடுத்துவிட்டு, தைமூர் தானே ஒரு கையில் வாளுடனும், மறுகையில் கோடாரியுடனும் படையினுள் புகுந்தார்.

வீரர்களையும் யானைகளையும் வெட்டிக்கொண்டே கோட்டை‌வாயிலை நோக்கி முன்னேறினார்.

சிறிது தூரத்தில் குதிரையில் ஏறிப்போரிட்டார். தவறி கீழே விழுந்தபோது கைகளிலும் மணிக்கட்டிலும் ரத்தம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

தனது கால்களில் ஐந்து காயங்கள் ஏற்பட்டதாக தைமூர் தனது சுய சரிதையில் எழுதியுள்ளார்.

தைமூரின் தளபதிகள் டெல்லிக்குள் நுழைந்து அதனை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

மறுநாள் தைமூர் டெல்லியில் நுழைய அந்த வினோதம் நிகழ்ந்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!