இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -1
கப்ளிசேட்
உமையாக்களின் பேரரசு -7 (கி.பி.661-750)
எகிப்து,ஏமன் பகுதிகளில் அப்துல்லா இப்னு சபா தனது கொள்கை குழப்ப பிரச்சாரத்திற்கு ஆட்களை திரட்டினான்.
பொதுவாக மெய்க்காவலர்கள் இல்லாத கலீபா உதுமான் (ரலி) அவர்களின் வீட்டை இந்த குழப்பவாதிகளும், மதினாவிலிருந்த அவர்களை பிடிக்காத சிலரும் ஒன்று சேர்ந்து முற்றுகை இட்டார்கள்.
மதினாவில் அதிகமானோர் மக்காநகருக்கு சென்றிருந்த சமயத்தை சரியாக தேர்வு செய்து, பயன்படுத்திக் கொண்டது இந்த குழப்பவாதிகளின் படை.
கலீபா உதுமான் (ரலி) அவர்களின் வீட்டிற்கு தண்ணீர்,உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களை செல்லவிடாமல் தடுத்தனர்.
முதுமை அடைந்திருந்த அவர்களை, இறுதியில் சுவர் ஏறிக் குதித்து வீட்டின் உள்ளே சென்ற குழப்பவாதிகளின் படை அவர்கள் குர்ஆன் ஓதிய நிலையிலேயே வெட்டி கொலை செய்தார்கள்.
தடுத்த அவர்களின் மனைவியின் விரல்களும் துண்டானதாக கூறப்படுகிறது. அவைகளை ஒரு பெட்டியில் வைத்து சிரியாவின் தலைநகர் டமாஸ்கசுக்கு அனுப்பப்பட்டது. மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்பு அது புதைக்கப்பட்டது.
இப்போது மதினாவில் பெரிய குழப்பம் ஏற்பட்டது. அரபுலகமே செய்தியறிந்து அதிர்ந்து போனது.
அந்த இக்கட்டான சூழலில் அலி(ரலி) அவர்கள் கலீபாவாக பதவி ஏற்றார்கள்.
அவர்களை சிரியாவின் கவர்னராக இருந்த முஆவியா (ரலி) அவர்கள் ஏற்கவில்லை.
தனது உறவினரான கலீபா உதுமான் (ரலி) அவர்களை கொலை செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
கொஞ்சம் குழப்பங்கள் குறைந்து ஆட்சி நிலையான பிறகு குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்கலாம் என்று அலி(ரலி) அவர்கள் கூறியதை முஆவியா (ரலி) அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை.
ஆகவே அலி(ரலி) அவர்களை முஆவியா (ரலி) அவர்கள் கலீபாவாக ஏற்றுக் கொள்ளவில்லை.
மதினா மற்றும் இதர இஸ்லாமிய பிரதேசங்களில் அலி(ரலி) அவர்களின் ஆட்சியும்,
சிரியா, பாலஸ்தீனம் போன்ற பகுதிகளில் முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சியுமாக முதன்முதலில் இஸ்லாமிய ஆட்சிப்பீடம் இரண்டாக பிரிந்தது.
இருபது ஆண்டுகள் கவர்னராக முஆவியா (ரலி) அவர்கள் சிறப்பாக நிர்வாகம் செய்ததால், அந்தப்பகுதியின் முழு ஆதரவும் முஆவியா (ரலி) அவர்களுக்கே இருந்தது.
நிர்வாக வசதிக்காக மதினாவிலிருந்து தங்கள் தலைநகரை கூபா (இன்றைய ஈராக் பகுதி) அலி(ரலி) அவர்கள் மாற்றினார்கள்.
அங்கு அவர்களுக்கு ஆதரவு அதிகம் இருப்பதாக வந்த செய்தியால் இஸ்லாமிய ஆட்சியின் தலைநகர் முதன்முதலாக மாறியது.
கூபாவில் அலி(ரலி) அவர்கள் கொல்லப் படுகிறார்கள். அதன் பிறகு அவர்களின் மூத்தமகன் ஹஸன் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள்.
ஹஸன்(ரலி) அவர்கள் மிக அமைதியான குணம் கொண்டவர்கள். இஸ்லாமிய உலகின் பிரிவினையை விரும்பாத அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கே ஆட்சியை விட்டுத் தர ஒப்புக் கொண்டார்கள்.
ஆட்சியை முஆவியா (ரலி) அவர்களிடம் ஒப்படைக்க ஒரு நிபந்தனையும் விதித்தார்கள்.
என்ன நிபந்தனை???
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









