இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -1
கப்ளிசேட்
உமைய்யாக்களின் பேரரசு -35
(கி.பி 661-750)
அப்பாஸிய பரம்பரையின் முகம்மது இப்னு அலி அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை ஒன்று பிறந்தது.
தனது ஆதரவாளர்களிடம் அந்த குழந்தையை காட்டி இந்த குழந்தைதான் அடுத்த அப்பாஸிய ஆட்சியாளர் என்று அறிவித்தார்.
உமைய்யாக்களின் அராஜகங்களால் மக்கள் வெறுப்படைந்து புதிய அணியில் சேர ஆரம்பித்தனர்.
“கராஸ்” என்பவர் சிறந்த பேச்சாளர். அவர் அப்பாஸிய குழுவிற்கு ஆதரவு என்ற நிலையில், இஸ்லாமிய ஐந்து முக்கிய கடமைகளோடு, ஆறாவது கடமையாக அலி(ரலி) அவர்களின் குடும்பத்தின் அப்பாஸிய குழுவை ஆதரித்து உமையாக்களை விரட்ட வேண்டும் என்று பேச ஆரம்பித்தார்.
இதன் ஆபத்தான போக்கை உணர்ந்த முகம்மது இப்னு அலி அவர்கள், இப்படி பேசுவது தவறு என்று கூறி அவரை குழுவிலிருந்து நீக்கினார்.
வலீத் இப்னு யஜீது ஒரு வருடம் மூன்று மாதமே ஆட்சிசெய்து மரணத்தை தழுவினார்.
அடுத்து யஜீது இப்னு வலீத் என்பவர் பதவியேற்றார். அவரும் பெரிதாக எதையும் சாதிக்காமல், ஐந்து மாதமே ஆட்சிசெய்து 35 வயதில் மரணமடைந்தார்.
இவரை அடுத்து இப்ராஹீம் இப்னு வலீத் இரண்டே மாதங்களில் மரணமடைந்தார்.
இவருக்கு பிறகு மர்வான் இப்னு முகம்மது ஆட்சி பொறுப்பேற்று ஆறு வருடங்கள் ஆட்சி புரிந்தார்.
இந்த இடைப்பட்ட முப்பது ஆண்டுகளில் அப்பாஸிய குழு முழு வலிமை அடைந்தது. அபூ முஸ்லீம் இப்னு குராசானி தலைமையில் ஒன்றிணைந்த அப்பாஸிய படை, மன்னர் மர்வான் இப்னு முகம்மதுவை துறத்திப்பிடித்து கொலை செய்தது. அவரின் தலையும் வெட்டி எடுக்கப்பட்டது. உமைய்யா அரசர்களின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.
முகம்மது இப்னு அலி கூறிய அவரது குழந்தை இன்று வாலிபமடைந்து அப்துல்லாஹ் இப்னு சுஃபா என்ற பெயரில் முதல் அப்பாஸிய மன்னராக பதவி ஏற்றார்.
ஹிஜ்ரி 41 முதல் 132 வரை கி.பி 661-750 வரை முஆவியா (ரலி) முதல் இறுதியாக மர்வான் இப்னு முகம்மது வரையிலான 14 அரசர்களின் ஆட்சிகளில் நன்மையும்,தீமையும் கலந்தே இருந்தது.
உமைய்யாக்களின் பேரரசில் சீனா,இந்தியாவின் ஜார்கண்ட் பகுதிவரை, முழு ஆப்ரிக்கா, ஐரோப்பா , அட்லாண்டிக் கடல் வரை உலகில் மூன்றில் இரண்டு பங்கை ஆட்சி செய்தனர்.
இவர்களின் காலத்தில்தான் இமாம் அபூஹனீபா (ரஹ்),இமாம் மாலிக் (ரஹ்) அவர்களும் வாழ்ந்தார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறிய, குலாபாயே ராஷிதீன்களின் முப்பது வருட ஆட்சியே கிலாபத் என்ற முழு இஸ்லாமிய நெறிகளோடு நடைபெற்றது.
அதற்கு பிறகான ஆட்சிகள் வாரிசு ஆட்சிகளாக மாறி மன்னராட்சிகளாக விளங்கியது.
ஆகவே அரண்மனை, பாதுகாவலர்கள், சொகுசு வாழ்க்கை, மது,மாது என்று பேருக்கு இஸ்லாமிய மன்னர்களாக இருந்தாலும், இஸ்லாமிய நெறியில் இருந்து விலகிப் போனார்கள்.
மிக நல்ல ஆட்சியாளர்கள் கூட தனது வாரிசு அரசியலை தொடர அரசியல் கொலைகளை செய்தார்கள்.
இதில் சில மன்னர்கள் முழு இஸ்லாமிய வாழ்வியலோடு மிக பேணுதலாக உமர்இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களைப்போல ஆட்சி செய்தவர்களும் இருந்தார்கள்.
ஆட்சி,அரசு, அதிகாரம் என்று போகும்போது அதன் நியாயங்களும், தர்மங்களும் மாறிவிடுகின்றன.
வரலாற்றை தெரிந்து கொள்வோம்.
உமைய்யாக்களின் பேரரசின் ஆட்சி வரலாறு இத்துடன் முடிவடைகிறது. முதல் பகுதி நிறைவடைகிறது
இனி, அப்பாஸிய பேரரசின் ஆட்சிப்பாங்கை இரண்டாவது பகுதியாக நாளைமுதல் தொடர்ந்து ஆராய்வோம்..!

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









