இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!
பகுதி -1
கப்ளிசேட்;
உமையாக்களின் பேரரசு-5 (கி.பி.661-750)
உமைய்யா பேரரசின் தலைநகர் டமாஸ்கஸ் நகரின் ஜும்மா மசூதி நிரம்பி வழிந்தது.
உமைய்யா ஆட்சியின் அவசியங்களையும், நன்மைகளையும், அதன் வரலாறுகளையும், மக்களுக்கு எடுத்து சொல்ல சொல்லி பேரரசர் முஆவியா (ரலி) அவர்கள் ஜும்மா மசூதியின் தலைமை இமாமை கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.
அரபுலகின் வரலாற்று நிகழ்வுகளை உமைய்யா வம்சத்தின் வரலாறுகளை ஜும்மா மசூதியில் மக்களுக்கு விளக்கப்படும் என்ற செய்தி நகர் முழுவதும் அறிவிக்கப்பட்டது.
இந்த செய்தி அருகிலுள்ள மாகாணங்களிலும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
காலை முதல் இஷாவரை வரலாற்றை மக்களுக்கு கூறும் நிகழ்ச்சி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெற்றது.
மக்களுக்கு உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மக்கள் உறவினர் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் தங்கி உமையாக்களின் வரலாற்றை ஆர்வமுடன் கேட்டனர்.
முஆவியா( ரலி) அவர்களின் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை இது வெளிப்படுத்தியது.
மக்கள் கூட்டத்தில் தலைமை இமாம் அவர்களின் குரல் கணீரென கம்பீரமாக ஒலித்தது.
அரபுலகம் சண்டைகளால் சீரழிந்திருந்த காலத்தில் கஃபா ஆலயமும் சீராக இல்லாமல் இருந்தது.
அப்போது அரபுலகின் சிறந்த தலைவரான குஸயீ அவர்கள் கஃபா ஆலயத்தின் சுவர்களை புனரமைத்து மேல் கூரை வேய்ந்து அதனை பராமரித்தார்.
அரபுகளை கஃபா ஆலயத்தை சுற்றி வீடுகள் கட்டவைத்து குடி அமர்த்தினார். மக்கமா நகரை சிறப்பாக நிர்வாகம் செய்தார்.
அரபுலகின் எல்லா மூலைகளிலிருந்தும் கஃபா ஆலயத்தை தரிசிக்க மக்கள் வருவார்கள்.
மக்கா பல ஊர்களின் மையப்பகுதியாக இருந்தது.மக்காவின் சந்தையும் புகழ் பெற்று விளங்கியது.
மக்கள் அதிகமாக கூடும் மாதங்களில் வணிகர்கள் தங்கள் பொருள்களை ஒட்டகத்தில் ஏற்றிவந்து சந்தையில் காட்சிப்படுத்து வார்கள்.
வணிகர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை விற்றும், வாங்கியும் கொள்வார்கள்.
கஃபாவை தரிசிக்க வரும் பயணிகளுக்கு மக்கா சந்தையில் எல்லாப் பொருள்களும் எளிதாக கிடைத்தன.
மக்காவின் தலைவர் குஸயீ அவர்களுக்கு ஹாஷிம், அப்துஸ்ஸம்ஸ், என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் மூத்தவரான ஹாஷிமிற்கு கஃபாவை பராமரித்தல் கஃபாவிற்கு திரைச்சீலை மாற்றுவது என பொறுப்பு கிடைத்தது.
ஆகவே குஸயீக்குப்பிறகு மக்காவின் தலைவராக ஹாசிம் இருந்தார்.இது இளையவரான அப்துஸ்சம்சுக்கு பொறாமையை ஏற்படுத்தியது.
மக்காவின் நிர்வாகமும், பொறுப்பும் அதன் புனிதத் தன்மையாலும் புனிதப் பயணிகளின் வருகையாலும், வணிகச் சந்தையாலும், முக்கிய நகரமாக விளங்கியது.
ஹாஷிம் அவர்களுக்கு அப்துல் முத்தலீப் என்ற மகனும்,
அப்துஸ்ஸம்ஸ் அவர்களுக்கு உமைய்யா என்ற மகனும் இருந்தனர்.
அப்துல்முத்தலிப் அவர்களே மக்காவின் தலைவராக, கஃபாவை பராமரிப்பவராக இருந்தார்.
மக்காவின் பொறுப்புகள் கிடைக்கப் பெறாததால், பொறாமைப்பட்ட சிச்சாமகன் உமைய்யாவும், போட்டியாக கஃபாவை தரிசிக்க வரும் பயணிகளுக்கு குடிநீர் மற்றும் பல்வேறு உதவிகளை செய்துவந்தார்.
அப்துல் முத்தலிப் மகன் அப்துல்லா அவர்களுக்கு இந்த பிரபஞ்சங்களின் பேரொளியாக நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்தார்கள்.
அப்போது அரபுலகில் பல அதிசயங்கள் நடந்தன. முழு உலகங்களிலும் ஏற்படப்போகும் அறிவுப் புரட்சியை ஆன்மீக புரட்சியை முன்னறிவிப்பதாக வானில் தோன்றிய அன்றைய முழுநிலா மின்னியது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









