ஈரான் நாட்டில் பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற வழக்கம் இருக்கும் நிலையில், ஹிஜாப் அணியாத பெண்கள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு, ஹிஜாப் அணிய முடியாது என்று கூறிய ஒரு பெண் கைது செய்யப்பட்டு, அதன் பின் சிறைச்சாலையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, ஐநா இதற்கு கண்டனம் தெரிவித்தது. இருப்பினும், ஈரான் தனது கொள்கை முடிவுகளில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில், ஹிஜாப் அணியாத பெண்களை அடையாளம் காண ட்ரோன்களை பயன்படுத்தி வருவதாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நாசர்” எனப்படும் செயலியின் மூலம் இந்த ட்ரோன் செயல்படுவதாகவும், முக்கிய பகுதிகளில், குறிப்பாக பேருந்துகள், மெட்ரோ ரயில்வே நிலையங்கள் ஆகிய இடங்களில் ட்ரோன் சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. ஹிஜாப் அணியாமல் செல்லும் பெண்களை அடையாளம் கண்டு அரசுக்கு தகவல் அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ட்ரோன்களில் பேசியல் ரிகக்னிஷன் (Facial Recognition) சாப்ட்வேர் இருப்பதால், உடனடியாக ஹிஜாப் அணியாத பெண்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அதே போல், ஹிஜாப் அணியாமல் வாகனங்களில் செல்லும் பெண்களை இந்த ட்ரோன் வாகனத்தின் எண்ணுடன் படம் பிடித்து காவல்துறைக்கு அனுப்பும்.
காவல்துறை தரப்பில் இருந்து உடனடியாக அந்த வாகன உரிமையாளருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். முதல் கட்டமாக எச்சரிக்கை வழங்கப்பட்ட பிறகு, இதே தவறு மீண்டும் நடந்தால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால், ஈரான் நாடு முழுவதும் ஹிஜாப் அணியாத பெண்களை அடையாளம் காண ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதால், அவர்கள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்று கூறப்படுகிறது.
You must be logged in to post a comment.