இறைவனின் அழகிய படைப்பில், இந்த பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது.
இவை அனைத்தும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால்… மனிதனை தவிர மற்றவை அனைத்தும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது ‘ஆறறிவு படைத்த மனிதன்’ தனது சுயநலத்திற்க்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் பிறவற்றுக்கு ஆபத்தாக முடிந்து விடுகிறது. எங்கும் படபடவென்று தன் சிறகுகளை விரித்து சுறுசுறுப்பாக பறந்து கொண்டிருக்கும் சிட்டுகுருவி இன்று எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. கீழக்கரையிலும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் கூட காணமுடிவதில்லை.

சிட்டுக்குருவி (Sparrow) என்றால் மனதை பறி கொடுக்காதவர்களே இருக்க முடியாது. தமிழ்நாட்டில் இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக்குருவிகள் ,ஊர்க்குருவிகள் என்றும் கீழக்கரை பகுதிகளில் கிணற்றான் குருவிகள், சிட்டுக்குருவிகள் என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
யாரையும் துன்புறுத்தாத அதன் அமைதியான சுபாவம், அதன் அலாதியான சுறு சுறுப்பு உற்சாகத்துள்ளல், எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள எந்நேரமும்.. படு ஜாக்கிரதையான உருட்டும் விழிப்பார்வை, அதிகாலை நேரத்தில் கீச்சு.. கீச்சு.. என்று கத்தும் மெல்லிய குரலில் இசை எழுப்பும் விதம், பட்டுப் போன்ற மென்மையான உடலைமைப்பு, மொத்ததில் அப்பாவியான தோற்றம் என்று மனிதர்கள் பார்க்கும் மாத்திரத்தில் மனதை ஈர்க்கும் மந்திரத் தன்மைகளால் சுதந்திரமாக சிறகடித்த, இந்த சின்னஞ் சிறு சிட்டுக் குருவிகள் இன்று மறையும் தருவாயில் உள்ளது.
இது குறித்து சகோதரி சாதிக்கா தன் வலைப் பக்கத்தில் கூறும் போது “மைனா (maina – Acridotheres tristis), வல்லூறு (Shaheen Falcon), ஆந்தை (hawk) பொன்னி (indian pitta) போன்று அழிந்து வரும் பறவை இனங்களில் இதுவும் ஒன்றாகிப் போனது தான் கவலை தரும் உண்மை. சிறுக சிறுக சேமிப்பதனைக்கூட ‘சிட்டுக் குருவி சேர்த்தார்ப் போல்’ என்றே சிட்டுக்குருவியை முன்னிலைப்படுத்தி உவமானம் கூறுவார்கள்.
இளம் ஜோடிகளை ‘இளம் சிட்டுகள்’ என்றும், இளமை பிராயத்தில் சுறு சுறுப்பாக வளைய வரும் யுவன் யுவதிகளையும் ‘சிட்டுகள்” என்றும், வேகமாக ஓடியவனை ‘சிட்டென பறந்து விட்டான்’ என்றும் படைப்பாளிகள் கட்டியம் கூறுகின்றனர். சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…., சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு சிறகு முளைத்தது…, ஏ குருவி சிட்டுக்குருவி ஒஞ் சோடி எங்க அத கூட்டிக்கிட்டு…., இப்படிப்பல பாடல்களை கொண்டு சினிமா உலகம் சிட்டுகுருவியின் அரும் பெருமைகளை பதிவு செய்துள்ளது.
சிட்டுக்குவிகள் செல்போன் டவரின் கதிரியக்கத்தால், சோடியம் விளக்குகளால் அழிகின்றன. முன்பு நிலத்தை சிறிது தோண்டினாலும் மண் புழுக்களை பார்க்கலாம், ஆனால் இப்போது வேதி உரங்கள் போடப்பட்ட மண்ணில் உயிர் சத்து இல்லாமல் புழுக்களை காண முடிவதில்லை. வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஈயம் கலவாத பெட்ரோல் (Unleaded-Petrol) புழு, பூச்சிகளை அழித்து விடுகிறது.
இதனால் குருவிகளுக்கு உணவுப் பற்றாகுறை ஏற்பட்டு விட்டது. செல்போன் கதிரியக்கம் குருவிகளின் கருத்தரிக்கும் தன்மையைச் சிதைக்கின்றன, அது மட்டுமின்றி பறந்து கொண்டிருக்கும் பொழுதே கதிர் வீச்சின் நச்சுத் தன்மையால் செத்து மடிகின்றன என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கிறது.
அந்தக்காலத்தில் வீட்டிற்கு வெளியே உரல் வைத்து நெல் குத்தி அரிசி எடுப்பார்கள். முறம் வைத்து தானியங்களை புடைப்பார்கள். ஆனால் இப்பொழுது அது அரிதாகி விட்டது. சிட்டுக்குருவிகள் கூடுகள் அமைப்பதற்கான இடமாக கூரைகளின் அடிப்பகுதி அக்காலத்தில் இருந்தது போக இப்பொழுது கான்கிரீட் கட்டடங்களில் இதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
மேலும் பொட்டலம் கட்டி மளிகை பொருட்களை விற்பனை செய்யும் அண்ணாச்சிகளை காணாமல் போகப்போக இந்த அப்பாவி உயிரினமோ உலகை விட்டே காணாமல் போய்க் கொண்டுள்ளது. அழிந்து கொண்டிருக்கும் பறவை இனமாக சிட்டுக்குருவிகளை காக்க 2010 ஆம் ஆண்டில் இருந்து ‘மார்ச் திங்கள் 20’ ஆம் நாளை உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூறப்படுகிறது.” என்று தெளிவுபட விவரித்துள்ளார்.

நம்முடன் இருந்த பல உயிரினங்கள் ஒவ்வொன்றாக நம்மை விட்டு விலகி போய்கொண்டே இருக்கின்றன… நமது சிறுவயதில் இருந்து நம்முடன் ஒன்றாக வாழ்ந்து வந்து கொண்டிருந்த சிட்டுக் குருவிகள் இன்று முற்றிலும் அழியும் கட்டத்திற்கு வந்துவிட்டது… நாளை நம் குழந்தைகள் சிட்டுக்குருவியை புகைப் படங்களில் மட்டுமே பார்ப்பார்கள் என்பது நிச்சயம்…!
யாருக்கும் தீங்கிழைக்காத இந்த சின்னஞ் சிறு உயிரினம் வளரும் தலை முறைகளுக்கு அறியபடாமல் போய் விடக் கூடிய ஆபத்தை தவிர்ப்போம்! தவறினால் இனி வரும் காலங்களில் சிட்டுக் குருவிகள் தினத்தை மட்டிலுமே கொண்டாடுவோமே தவிர சிட்டுக்களை கண்ணால் காண இயலாத நிலை ஏற்பட்டு விடும் அபாயம் வந்து விடும் என்றே அஞ்சத் தோன்றுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர் அலி பாட்சா கூறுகையில் ”சிட்டு குருவிகள் தங்கள் போக்கில் வாழ, வளர ஊரில் அன்றைய காலக் கட்டத்தில் இருந்த சூழ்நிலை இன்று அறவே அற்று போய்விட்டது எனபது இறுக்கமான் உண்மையே..
இதற்கு உயிரூட்ட நிச்சயமாக நம்மால் முடியும், ம்னதில் ஆசை, ஆவல் இருந்தால்.. பல லட்ச்ம் செலவழித்து இன்றைய காலக் கட்டத்திற்கு ஏற்ப வீடு வாசல்களை அமைத்தாலும், சில நூறு செலவழித்து சிட்டுக் குருவிகள் வாழ்வதற்கு ஏற்ப பிளைவுட்டால் அடுக்கு மாடிகள் கொண்ட பெட்டிகள் செய்து, வீட்டிற்கு வெளியே (குறிப்பாக மின் வயர் விட்டிற்கூள் நுழையும் குழாய்க்கு அருகில்) கைக்கு எட்டும் தூரத்தில் அமைக்கலாம்..அனைவரும் இது போல ஆர்வம் காட்டினால் சிட்டுகள் நிறைந்த ஊராக நம்தூரை காண்லாம்..
அதிகாலை வேளையில் அதனின் கீச்சு குரலை கேட்டால் மனம் நிச்சயமாக பரவசம் அடையும்.. அன்று பொதுக் கிணறுகள் நிறைய தெருக்கு தெரு இருந்தது.. அது அற்வே அழிக்கப்பட்டதும் இதன் அழிவுக்கான காரணங்களில் ஒன்று.. நவீன காலத்தில் அழை பேசி கோபுரங்களில் உண்டாகும் கதிர் வீச்சுகளினால் இந்த அற்புதமான சிட்டுக் குருவிகளின் அழிவுக்கு காரணம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன..
அதன் அழிவை தடுக்க நம்மால் ஆன தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ( குறைந்த் படசம் கூடுகள் செய்வது மூலம்)சங்கல்பம் செய்வோமாக..அதையும் படைத்து காக்கும் நாயன் நமக்கு நல்லருள் புரிவானகவும்.ஆமீன்..” என்று தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









