டீ கிளாசை திருடி அதனை இன்ஸ்டாகிராம் வீடியோவாக பதிவிட்ட பிரபல யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்காசி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்காசியில் உள்ள நெல்லை கருப்பட்டி காபி டீக்கடையில் யூடியூப்பர் ரவுடி பேபி, சூர்யா மற்றும் சோசியல் மீடியா நிறுவனர் சிக்கந்தர் மீது தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நெல்லை கருப்பட்டி டீக்கடை உரிமையாளர் பார்த்திபன் புகார் மனு அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த வாரத்தில் நமது கடையில் டீ குடிப்பதற்காக ரவுடி பேபி மற்றும் சூர்யா ஆகியோர் வந்திருந்தனர். இதையடுத்து கடையில் உள்ள டீ கிளாசை திருடிவிட்டு சென்றது போன்று ஒரு வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். ஒற்றை கையில் டீ குடித்து கொண்டு கார் டிரைவிங் செய்வது போன்ற வீடியோக்கள் டிரெண்ட் ஆக வேண்டும் எனும் நோக்கில் பதிவிட்டுள்ளனர். இது தவறான விஷயம் என்றும், அதனை அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் தென்காசி நெல்லை கருப்பட்டி காபி உரிமையாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
மேலும், டீ குடித்து விட்டு காசு கொடுக்காமலும், டீ கிளாஸை திருடி சென்று விட்டார்கள் என்றும், அப்போது நான்கு சக்கர வாகனத்தை ஒற்றை கையால் இயங்கி விபத்து ஏற்படும் வகையில் வாகனத்தை ஓட்டி சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

