ரியாத்தில் மரணம் அடைந்த கட்டுமான பணியாளர் ஐயப்பன் உடலை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நிர்வாகிகளுக்கு அவரது உறவினர்கள் நன்றி தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டம் புக்கலம் கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் சவுதி அரேபியா ரியாத்தில் கட்டுமான பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 27.10.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மரணம் அடைந்தார். இந்த தகவலை இறந்து போன ஐயப்பனின் உறவினர் கஜேந்திரன், ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மண்டல தலைவர் மீமிசல் நூர் முகம்மதிடம் தொடர்பு கொண்டு தெரிவித்து, இறந்து போன ஐயப்பனின் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைக்க உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.





இதனைத் தொடர்ந்து மண்டல தலைவர் ரியாத் மண்டல சமூகநலத்துறைக்கு தகவல் கொடுக்க, தகவலைப் பெற்றுக் கொண்ட ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா ஆகியோர் விரைந்து செயல்பட்டு இந்திய தூதரகத்தின் உதவியுடன் அனைத்து பணிகளையும் முடித்து 4.11.2024 திங்கட்கிழமை இரவு ரியாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு கட்டுமான பணியாளர் ஐயப்பனின் உடலை அனுப்பி வைத்தனர். இதனையடுத்து 05.11.2024 செவ்வாய்க் கிழமை காலை 9 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு உடல் வந்தடைந்தது.
திருச்சி கிழக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தாயகம் வந்தடைந்த ஐயப்பனின் உடலை பெற்றுக்கொண்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அவரின் சொந்த ஊருக்கு கொண்டு சேர்த்தனர். ஐயப்பனின் உடலை பெற்றுக் கொண்ட அவர்களுடைய உறவினர்கள், உடலை சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து எங்கள் வீடு வரை கொண்டு வந்து சேர்த்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.