காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.
இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்துள்ளன.
இந்நிலையில் இந்திய எல்லையில் 11 இடங்களில் பாகிஸ்தான் மீண்டும் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடந்து வருவதாகவும், பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா ‘எக்ஸ்’ தளத்தில், “போர் நிறுத்தம் என்ன ஆனது? ஸ்ரீநகர் முழுவதும் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்கின்றன” என்று பதிவிட்டுள்ளார். மாலை 5 மணிக்கு போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment.