நாடு முழுவதும் பழைய ₹500 மற்றும் ₹1,000 நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு வங்கி சேமிப்பு கணக்குகள் கருப்பு பணம் மாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வருமான வரித்துறைக்கு எழுந்துள்ளது. இதன்பிறகு, வங்கி கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட டெபாசிட் விவரங்களை ஆராய்ந்த வருமான வரித்துறை, இவற்றில் கருப்பு பணத்தை கண்டுபிடிக்க ‘ஆபரேஷன் கிளீன் மணி’ எனும் பெயரில் அதிரடி திட்டத்தை செயல்படுத்தியது. இந்த வகையில் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு முதல் கட்டமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை 18 லட்சம் டெபாசிட்தாரர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் விளக்கம் கேட்டுள்ளனர். இ-மெயில்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்த கீழக்கரை வங்கிகளின் வாடிக்கையாளர் பலருக்கு விளக்கம் கேட்டு வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வங்கி கடன் பாக்கி போன்றவற்றை ரொக்கமாக செலுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை முயற்சித்து வருகின்றனர். கடன் பாக்கியை ரொக்கமாக செலுத்தியவர்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கீழக்கரை நகரில் பெரும்பாலானோர் வெளிநாடு வாழ் சகோதரர்களாகவும், வருமான வரி நோட்டீஸ் குறித்த தகவல்கள் சம்பந்தமான விழிப்புணர்வு இல்லாதவர்களாகவும் உள்ளனர். இது போன்ற வருமான வரி நோடீஸ் உங்கள் வீட்டிற்கு வந்தால் பயப்பட வேண்டியதில்லை. வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் எஸ்.சதீஷ்குமார் தரும் தகவல் கீழை நியூஸ் வாசகர்கள் பார்வைக்கு :

“நோட்டீஸ் வந்ததும் முதலில் அலட்சியப் படுத்தாமல் அதை முழுமையாகப் படிக்க வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள பெயர், பான் எண் போன்ற விவரங்கள் உங்களுடையது தானா என்பதைத் தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பொதுவாக, இதுபோன்ற விவகாரங்களை வருமான வரித்துறையைச் சார்ந்த உளவு மற்றும் குற்றப் புலனாய்வு இயக்குநரகம்தான் கையாண்டு வருகிறது. வரி செலுத்துவோர், வரி செலுத்தாதவர் என்ற பாரபட்சமில்லாமல் அதிக மதிப்பில் பணம் மற்றும் சொத்துப் பரிவர்த்தனை செய்யும் அனைவரின் வருமானம் குறித்த விவரங்களும் இந்தத் துறையிடம் இருக்கும். நமக்கே தெரியாத நம்முடைய முதலீடு, சேமிப்பு போன்றவை மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த விவரங்களும் அந்தத் துறையிடம் இருக்கும். அதனால் வரியிலிருந்து தப்பிக்க முடியாது.
எதற்கெல்லாம் நோட்டீஸ் வரும்?
வருமான வரி செலுத்தும் நிலையில் உள்ள ஒருவர் தன்னுடைய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டாலும், வரி செலுத்த வேண்டிய மதிப்பில் உள்ள வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருந்தாலும் நோட்டீஸ் அனுப்பப்படும். கட்ட வேண்டிய வருமான வரிக்கான வட்டியும் செலுத்துவதுடன் கட்டாயம் அபராதத்தையும் கட்ட வேண்டியிருக்கும். நீங்கள் பெறும் வருமானத்துக்கு வரி பிடிக்கப்பட்டு இருந்தாலும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் நோட்டீஸ் அனுப்பப்படும்.
அதேபோல் கீழே தரப்பட்டுள்ள அதிக மதிப்பிலான பணம் மற்றும் சொத்து பரிவர்த்தனைகளை நாம் கணக்கில் காட்டா விட்டாலும் நோட்டீஸ் அனுப்பப்படும்.
* ரூ.30 லட்சத்துக்கும் மேல் நிலமோ, வீடோ வாங்கினாலும் விற்றாலும் * சேமிப்புக் கணக்கில் வருடத்துக்கு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பரிவர்த்தனை இருந்தால் * ஒரே நாளில் ரூ.50,000-க்கும் அதிகமாக அடிக்கடி டெபாசிட் செய்தால் * வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக கிரெடிட் கார்டுக்குக் கட்டணம் கட்டியிருந்தால் * நிரந்தர இருப்பு வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமானால் * மியூச்சுவல் ஃபண்ட், ஈக்விட்டி பங்குகள் போன்றவை வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமானால்
அதேபோல், வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றாலும், ஆடம்பரமாக திருமணம் செய்தாலும், ஏன் வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்றாலும், இன்னும் சில காரணங்களுக்காகவும் நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது.
நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஊழியராக இருக்கிறீர்கள் என்றால், உங்கள் வருமானத்துக்கான வரிப் பிடித்தம் செய்யப்படும். ஆனால், உங்களுடைய நிறுவனத் தரப்பில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய தவறியிருந்தால் உங்களுக்கு நோட்டீஸ் வரும்.
மேலும், ரூ.50 லட்சத்துக்கும் மேலாக இடமோ, வீடோ வாங்கும்போது, இந்திய குடிமக்களுக்கு 1 சதவிகிதமும், என்ஆர்ஐ-களுக்கு 20 சதவிகிதமும் வரிப் பிடித்தம் செய்யப்படும். விற்றவர் தனது வருவாய்க் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், இருவருக்குமே வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்படும்.
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், நிறுவனங்களின் கடன் பத்திரங்கள், கூட்டுறவு கடன் சங்கம் போன்றவற்றில் வைத்துள்ள முதலீடுகளுக்குக் கிடைக்கும் வட்டி முதற்கொண்டு அனைத்து விவரங்களும் வருமான வரித் துறையிடம் இருக்கும்.
மேலும், ரூ.50,000-க்கும் மேலாக உணவகம் மற்றும் விடுதிகளிலோ, விமானத்திலோ செலவழித்தால், அதற்கு பான் எண் குறிப்பிட வேண்டும். ரூ.2 லட்சம் ரொக்கமாகக் கொடுத்து ஆபரணங்கள் வாங்கினாலும் பான் எண் அவசியம்.
பொதுவாக, மக்கள் தங்களின் வருமான வரியைக் குறைப்பதற்காக தங்களின் வருவாயைத் தெரிந்தோ, தெரியாமலோ குறைத்துக் காட்டிவிடுகிறார்கள். ஆனால், அவர்களின் சேமிப்புக் கணக்கு, நிரந்தர வைப்புக் கணக்கு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், பங்குகளில் செய்துள்ள முதலீடு மற்றும் அசையாத சொத்துக்கள் என அனைத்து விவரங்களும் வருமான வரித் துறைக்குச் சென்றுவிடும். நாம் வங்கியில் வைத்துள்ள இருப்புக்குக் கிடைக்கும் வட்டியும் வருமானக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
வருமான வரித் துறை, தானாகவே வரி செலுத்துவோரின் விவரங்கள் அப்டேட் ஆகும் வகையில் நன்கு மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் மூலம் விவரங்களையெல்லாம் பராமரித்து வருகிறது. அதனால் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமான வருமானம் வரும் ஒவ்வொருவரின் தகவல்களும் அதில் புதுப்பிக்கப்படும்.
வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கும், தவறாக தாக்கல் செய்தவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். ஒவ்வொரு நிதி ஆண்டு க்கான நோட்டீஸ்களும் இரண்டு நிதி ஆண்டு களுக்குப்பின் அனுப்பப்படும்.
குறிப்பிட்ட நேரத்தில் வரிக் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால், 90% வரை அபராதம் உண்டு. வரி ஏய்ப்பு தொகை மிக அதிகமாக இருந்தால், சிறை தண்டனையும் உண்டு.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









