தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் குறித்தும், இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் பற்றிய விவரங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
இது குறித்த மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 2023-24-ஆம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டமானது மத்திய மாநில நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் கத்தரி, மிளகாய் மற்றும் தக்காளி ஆகிய காய்கறிப் பயிர்களில் (வீரிய ஒட்டு ரகம்) குழித்தட்டு நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு ஹெக்டேர் ஒன்றுக்கு 15,000 நாற்றுகள் மற்றும் இடுபொருட்கள் சேர்த்து ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 மதிப்பிலும், பழப்பயிர்களில் கொய்யா அடர் நடவுக்கான பதியன்கள், திசு வாழைக்கன்றுகள், பப்பாளிச்செடிகள், எலுமிச்சைப் பதியன்கள், நெல்லிச் செடிகள் ஆகியவையும் இதற்கான இடுபொருட்களும் 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன. மேலும் உதிரி மலர்கள் (பல்லிகை, சம்பங்கி, செண்டுமல்லி), சுனவதாளிதப் பயிர் கள்(காய்ந்த மிளகாய்) கிழங்கு வகை நறுமணப் பயிர்களுக்கு (இஞ்சி) 40% சதவீத மானியத்தில் விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன. பயிர்களில் நீர் மற்றும் களை மேலாண்மைக்கான நிலப்போர்வைகள் 50 சதவீத மானியத்திலும், மண்புழு உரம் தயாரிக்கத் தேவைப்படும் நிரந்தர மண்புழு உரப்படுக்கையை கட்டமைக்க பின்னேற்பு மானியமாக 50 சதவீதம் வழங்கப்படும். மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்து மகசூலை அதிகரிக்க தேனீ வளர்ப்புக்கு தேவையான தேனீக்கள், தேனீப்பெட்டிகள் மற்றும் தேன் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகியவை 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன. பண்ணை இயந்திரங்களான மினி டிராக்டர் (20 குதிரை திறனுக்கு குறைவாக) மற்றும் பவர்டிரில்லர் (8 குதிரை திறனுக்கு குறைவாக) 40 சதவீத பின்னேற்பு மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
மேலும், வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் குறைந்த விலையிலான வெங்காய சேமிப்பு கிடங்கு 50 சதவீத பின்னேற்பு மானியத்திலும் (ரூ.87,500) மற்றும் விவசாயிகள் காய்கறிகள் விற்பனைக்கு பயன்படுத்தும் வகையில் நகரும் காய் மற்றும் கனிகள் விற்பனை வண்டி 50 சதவீதம் பின்னேற்பு மானியத்திலும் வழங்கப்பட உள்ளன. உயர் தொழில்நுட்ப தோட்டக்கலைப் பயிர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் நிழல் வலைக்கூடம், பசுமைக்குடில் ஆகியவை அமைக்க 50% மானியமும், சிப்பம் கட்டும் அறை அமைத்திட 50% அறுவடை செய்த விளை பொருட்களை சிறந்த முறையில் சேமித்திட குளிர் சேமிப்பு கிடங்குகள் அமைக்க 35% மானியமும் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட திட்ட இனங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகளுக்குரிய ஆவணங்களான பட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் – 2 மற்றும் அடங்கல் உள்ளிட்டவற்றை சம்மந்தப்பட்ட வட்டாரத்தின் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2023-24-ஆம் நிதியாண்டில் 40 பஞ்சாயத்து கிராமங்கள் அரசாங்கத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட இந்த பஞ்சாயத்து கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 80 சதவீத இலக்கீடு இக்கிராமங்களில் செயல்படுத்தப்படும் என்றும், மேற்கூறிய அனைத்து திட்ட இனங்களும் 80 சதவீதம் பொது பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகளுக்கும் வழங்கப்படும். பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 30 சதவீதம் திட்ட இனங்கள் பெண்களுக்கு வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு tnhorticulture.tn.gov.in., என்ற தோட்டக்கலைத் துறை இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்திட வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் வேளாண் அலுவலகத்தை அணுகி பயன்பெற வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









