தற்சமயம் சீனாவில்
பரவி வரும் ஹெச் எம் பி வி எனும் வைரஸ் தொற்று குறித்து அனைவரும் அச்சத்துடன் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலை குறித்தும் ஹெச். எம். பி.வி குறித்தும்
இந்தப் பதிவின் மூலம் விரிவாக விளக்குகிறார்;
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
2019இல் சீனாவின் வூஹான் நகரில் இருந்து புதிய கொரோனா வைரஸ் 2019 உருவெடுத்து உலகம் முழுவதும் பரவி அதற்கடுத்த இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றாக மாறி உலகை ஆட்டுவித்தது.
பல லட்சம் உயிர்கள் இறக்கக் காரணமாகவும் அமைந்தது.
அப்போதிருந்து
நம் அனைவருக்கும்
சீனா என்றாலோ
சீனாவில் சுவாசப் பாதை தொற்றுப் பரவல் நிகழும் எக்ஸ் தள காணொளிகள் வருடா வருடம் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பரவும். பிறகு அடங்கும்.
இது கொரோனா தொற்று மீது நம் அனைவருக்கும் இருக்கும் போஸ்ட் ட்ரமாடிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர் ஆகும். அதாவது
மீண்டும் ஒருமுறை கொரோனா போன்ற தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பதட்டம் நமக்குள் வந்து விடும்.
இதனால் சீனா குறித்து எந்த செய்தி வந்தாலும் அது வைரல் ஆகிவிடுகிறது.
சரி வாருங்கள்
இப்போதைய ஹெச் எம் பி வி விஷயத்துக்கு வருவோம்.
ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் என்பது மனிதர்களுக்குப் புதிய வைரஸ் அன்று.
இது 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவத் துவங்கிய புதிய கொரோனா வைரஸ் போன்று மனிதர்களுக்குப் புதிய வைரஸ் அன்று.
ஏற்கனவே பல பத்து ஆண்டுகளாக நம்மிடையே இந்த வைரஸ் சுற்றி சுற்றி தொற்றுகளை ஏற்படுத்தி வரும் வைரஸ் தான் என்பதால் நம்மில் பெரும்பான்மையினருக்கு இந்தத் தொற்றுக்கு எதிரான சிறிய அளவு எதிர்ப்பு சக்தியேனும் இருக்கும்.
பல பத்து வருடங்கள் நமது மனிதர்களிடையே சுற்றில் இருந்தாலும்
இந்த வைரஸ் 2001 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் ஆய்வகத்தில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
கொரோனா போன்றே இதுவும் ஒரு ஆர் என் ஏ வைரஸ் ஆகும்.
நியூமோ வைரிடே எனும் சுவாசப்பாதையைத் தாக்கும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.
இது தற்போது வரை
இரண்டு வகைகளாக உருமாற்றம் அடைந்துள்ளது
ஏ மற்றும் பி வகை.
அந்த வகைகளுக்குள் ஏ1, ஏ2, ஏ2பி, ஏ.சி, பி1, பி2 ஆகிய உப வகைகள் உள்ளன.
இவை அனைத்துக்கும் அவைகளிடத்தே இருக்கும் எஃப் ஜீன்களில் சிறிய அளவு உருமாற்றம் இருக்கும் அவ்வளவு தான்.
இந்தியாவில் ஏற்கனவே
ஏ2பி, பி1 , பி2 , ஏ2சி ஆகிய வகைகள் பரவுவது கண்டறியப்பட்டுள்ளன என்பதால் நமக்கும் இந்த வைரஸ் புதிதன்று.
இந்த வைரஸ் – குளிர்காலங்களில் பரவும்
பல்வேறு வகை சுவாசப்பாதை தொற்றுகளான
– ஆர் எஸ் வி
– இன்ஃப்ளூயன்சா வைரஸ்
– ரைனோ வைரஸ்
– அடினோ வைரஸ்
– பேரா இன்ஃப்ளூயன்சா வைரஸ்
– கொரோனா வைரஸ்
ஆகிய பல வைரஸ்களுள் ஒன்று தான்.
இது பெரும்பான்மை மக்களுக்கு தனிப்பட்ட அச்சுறுத்தல் தரக்கூடிய பெரிய பிரச்சனைக்குரிய வைரஸ் அன்று.
இந்த வைரஸ் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் வயதினர்
– ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.
வீசிங் மற்றும் வலிப்பு உள்ள குழந்தைகளுக்கு அதிகம் இந்தத் தொற்று ஏற்படுகிறது.
பெரும்பான்மையினருக்கு
சாதாரண சுவாசப்பாதை தொற்றாகக் கடந்து செல்லும்.
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள்
வீசிங் இருக்கும் குழந்தைகள் ஆகியோருக்கு நுரையீரலில் தீவிர தொற்று ஏற்படலாம்.
– முதியோர்கள்
– புற்றுநோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள்
– எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பெற்றவர்கள் ( இவர்களிடையே தீவிர தொற்று நிகழும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது )
– உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்
– எதிர்ப்பு சக்தி குன்றியோர்
ஆகியோருக்கு சற்று தீவிரத்துடன் தொற்று வெளிப்படலாம்.
இந்தியாவைப் பொருத்தவரை
இந்தத் தொற்றுப் பரவல்
– குளிர் காலங்களில் அதிகம் நிகழ்கிறது.
சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில்
கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றில் ஐந்து வயதை நிறைவு செய்தோரில்
4% ஹெச்.எம்.பி.வி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே சென்னைக்கும் தமிழ்நாட்டுக்கும் இந்தத் தொற்று புதிதன்று.
அறிகுறிகளைப் பொருத்தவரை;
காய்ச்சல்
சளி இருமல்
மூக்கு ஒழுகுதல்
மூக்கடைப்பு
போன்ற சாதாரண அறிகுறிகள் மட்டுமே வந்து நோய் குணமடையும்
எனினும்
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும்
முதியவர்களுக்கும் ஏற்கனவே ஹைரிஸ்க் என்று குறிப்பிடப்பட்டவர்களுக்கும்
– நியூமோனியா தீவிரமான நுரையீரல் தொற்று நிலை ஏற்படும்
இதன் அறிகுறிகள்
– மூச்சுத் திணறல்
– மூச்சு விடுவதில் சிரமம்
– நடக்கும் போது தலை சுற்றல்
– உள்ளங்கை பாதம் நீல நிறத்தில் மாறுதல்
– குழந்தைகளின் நெஞ்சுப் பகுதி உள்ளிளுத்து மூச்சு விடுதல்
– குழந்தை மூச்சு விடும் போது குறட்டை போன்ற சத்தம் கேட்பது
போன்றவை அபாய அறிகுறிகளாகும்.
சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில்
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களிடையே
வைரஸினால் உண்டான நுரையீரல் தொற்றுக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆன நோயாளிகளுள் 8.5% ஹெச்எம்பிவி தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
அவர்களுள் 80% பேருக்கு வீசிங் இருந்தது.
12% பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இந்தத் தொற்று ஏனைய சுவாசப்பாதை தொற்றுகள் போலவே
இருமுவது
தும்முவது மூலம் சளித்துகள்கள் காற்றில் பறந்து அதை நுகருபவர்களுக்குப் பரவுகிறது.
கண்ட இடங்களில் கை வைப்பதன் மூலம் கையில் தொற்று பட்டு அதை மூக்கிலும் வாயிலும் வைப்பதன் மூலம் பரவுகிறது.
எனவே,
பொதுவாக குளிர் காலங்களில்
வெளியே செல்லும் போது
முகக்கவசம் அணிந்து செல்லுவது நல்லது.
கைகளை அடிக்கடி சோப் போட்டுக் கழுவுவது நல்லது.
கைகளை கண்ட இடங்களில் வைக்காமல் இருப்பது இன்னும் நல்லது.
இந்த வைரஸ் தொற்றுக்கு எதிரான பிரத்யேக முறிவு மருந்து இல்லாவிடினும்
ரிபாவிரின் எனும் வைரஸ் கொல்லி மருந்து சிறப்பாக வேலை செய்கிறது.
தீவிரமான அளவு மரணங்களை விளைவிக்கக்கூடியதாக இல்லை என்பதால்
இதற்கென பிரத்யேக தடுப்பூசி இதுவரை கண்டறியப்படவில்லை.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில்
இந்த வைரஸ் ஏனைய சுவாசப் பாதை வைரஸ்கள் போன்றே அதன் நோய் தன்மையில் உள்ளது.
கொரோனா போன்ற பெருந்தொற்று நிலையை இந்த வைரஸ் உண்டாக்கும் வாய்ப்பு இப்போதைக்கு மிக மிகக் குறைவு.
எனவே இந்த வைரஸ் விசித்திரமானது என்றோ
பயங்கரமானது என்றோ அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இதுவும் கடந்து போகும்.
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









