வட சென்னை மற்றும் தெற்கு ஆந்திரத்துக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்தது.
இந்த நிலையில், மேற்கு வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே இன்று அதிகாலை 4.30 மணியளவில் கரையைக் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரம் மற்றும் வட தமிழகத்தின் மேல் தற்போது நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டதை தொடர்ந்து, வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆனால், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில், தெற்கு ஆந்திரத்தை நோக்கி புயல் சின்னம் நகர்ந்ததால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் படிப்படியாக மழை குறையத் தொடங்கியது.
இதன் காரணமாக, சென்னை மற்றும் 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட்டை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை இரவு வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.