மழையால் கடுமையாக பாதிப்படைந்த மதுரை! போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை!- முதலமைச்சர்..

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரையில் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவின் விவரம் வருமாறு;

மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை அனுப்பி வைத்தேன்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து,தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். குடியிருப்புப் பகுதிகளில் மழை நீரை வடிய வைக்க ராட்சத மின் மோட்டார்களும், பொறியாளர்களும், பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பிவைக்கப் பட்டுள்ளார்.

தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!