தென்காசி மாவட்ட மக்கள் மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. (குறள் 738) நோயில்லாதிருத்தல், செல்வம், வினை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர் என்னும் வள்ளுவனின் வாக்கிற்கிணங்க தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி 04.11.2023 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, அடையாறு டாக்டர் முத்துலட்சுமி பூங்கா அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நல்வாழ்வு பேணுவதற்கான நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் “நடப்போம் நலம் பெறுவோம்” (Health Walk) திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து நடைபயிற்சி மேற்கொண்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2023-24 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், உலக சுகாதார அமைப்பின் தரவுகள்படி உடற்பயிற்சி செய்வது நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய்களின் தாக்கத்தை 27 சதவிகிதமும், இதயநோயின் தாக்கத்தை 30 சதவிதமும் குறைக்கின்றது என்று அறியப்படுகிறது. நடைபயிற்சியானது மக்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமான எடையுடன் இருக்கவும் நாள்பட்ட உடல் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆகவே “நடப்போம் நலம் பெறுவோம்” என்பதற்கிணங்க பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களில் உள்ள நகராட்சி அமைப்புகளுடன் இணைந்து 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதையை கண்டறிந்து, ஆரோக்கியமான நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதைகள் ஏற்படுத்தப்படும். இதன் அடிப்படையில் அனைவரும் தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவதோடு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் மக்களுடன் இணைந்து மாவட்ட அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகிய அனைவரும் சுகாதார நடைபயிற்சியில் பங்கேற்பார்கள். நடைபயிற்சியின் முடிவில் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, அனைத்து மாவட்டங்களில் நகராட்சி அமைப்புகளுடன் இணைந்து 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதை கண்டறியப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சுகாதார நடைபாதைகளில் நடைபயிற்சி, தொற்றாநோய் மற்றும் சுகாதார விழிப்புணர்வு கொண்ட வாசகங்கள், வழிகாட்டிகள், மைல்கற்கள், ஓய்வு இருக்கைகள், குடிநீர் வசதி போன்ற மக்களின் அத்தியாவசியமான தேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு 57 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் தேவையான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையாக நடைப்பயிற்சி செய்வதை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சிறப்பு திட்டமாக ”நடப்போம் நலம் பெறுவோம்” சுகாதார நடைபாதை திட்டம் தென்காசி குற்றாலம் பிரதான சாலையில் உள்ள மின் நகர் சந்திப்பிலிருந்து தொடங்கி நடைபாதை காசிமேஜர்புரம் சந்திப்பு நோக்கி சென்று இலஞ்சிகுமாரர் கோவில் வழியாக 8 கி.மீ அளவில் மீண்டும் மின்நகர் சந்திப்பில் நிறைவடைந்தது. பொதுமக்கள் வசதிக்காக ஓய்வு இருக்கைகள், கழிப்பறை வசதி விழிப்புணர்வு பதாகை மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை அன்று உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை முகாம் சுகாதாரத் துறையினரால் நடத்தப்படும். உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் படி வாரத்தில் ஐந்து நாட்கள் தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் 8 கி.மீ (10 ஆயிரம் அடிகள்) வேகமாக நடப்பது உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்களை தடுக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. நீரிழிவு நோய்களால் ஏற்படும் சிகிச்சைகளை 30% வரை குறைக்க உதவுகிறது.
இத்திட்டத்தைப் பற்றி தென்காசி மாவட்ட பொதுமக்கள் தெரிவித்ததாவது: சுகன்யா, மருத்துவர்: நடப்போம் நலம் பெறுவோம் திட்டமானது மிகவும் உபயோகமான திட்டம். உடல் நலத்திற்கு இந்த நடைபயிற்சி என்பது எளிதாக எல்லோராலும் செய்யக் கூடிய ஒரு விஷயத்தை ரொம்ப அருமையாக இந்த அரசு நமக்கு செய்து கொடுத்துள்ளது. இந்த இடம் ஏற்கெனவே நிறைய பேர் நடைபயிற்சி செய்து கொண்டு இருக்கிற இடம் தான். இத்திட்டத்தின் மூலம் நிறைய பேருக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி இருக்கிறது என்பதில் மிகவும் சந்தோஷம். இன்றைக்கு இங்கே இந்த நிகழ்வில் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. நடப்போம் ஆரோக்கியமாக இருப்போம். எங்கள் ஆரோக்கியம் காக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ராஜகுலசேகர பாண்டியன்: தென்காசி மாவட்டத்தினுடைய தென் பொதிகை நடைபயில்வோர் சங்கத்தில் செயலராக இருக்கிறேன். நடப்போம் நலம்பெறுவோம் இந்த திட்டத்தின் மூலம் மேலகரம், இலஞ்சி மின்நகர் பகுதியை தேர்ந்தெடுத்ததற்கு இந்த அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 14 ஆண்டுகளாக நடைபயில்வோர் சங்கத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு விழா, சுகாதார முகாம்கள் நடத்தி வருகிறோம். எங்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்கள் நடப்படுகிறது. மேலும், உலக சுகாதார அமைப்பின் மூலம் செயல்படுவதால் இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் என 200 பேருக்கு மேல் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கிறோம். மக்கள் நலன் பேணும் அரசுக்கு எங்களுடைய தென்பொதிகை சங்கத்தின் மூலமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எஸ்.கே. பாலசுப்பிரமணியன்: தென்காசி மாவட்டத்தினுடைய தென்பொதிகை நடைபயில்வோர் சங்கத்தில் பொருளாளராக இருக்கிறேன். இந்த பகுதியில் உள்ள நடைபயில்வோர் கழகத்தில் இளைஞர்கள், முதியோர்கள் என பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுகிறார்கள். நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தினை செயல்படுத்திய மக்களின் முதல்வருக்கு நன்றி. மேலும் பல இளைஞர்களை நல்ல ஆரோக்கியத்திற்கு வழி நடத்திச் செல்ல நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம்.
சிவராஜம்: என் கணவர் வன அலுவலர் (ஓய்வு), நான் 20 வருடமாக நடைபயிற்சி செய்து வருகிறேன். அதனால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதற்கு முன்பிருந்தே நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இப்பொழுதும் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்கிறேன். நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தின் மூலம் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு இதயம், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் நல்ல முறையில் இயங்கும். நிறைய பேர் நடைபயிற்சி செய்யாமல் இருக்கிறார்கள், அவ்வாறு இல்லாமல் அனைவரும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொண்டால் நமக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் மிக சிறப்பான மக்கள் நலன் சார்ந்த திட்டம். “எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும்” என்றாற் போல் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் மூலம் மக்களின் உடல் நலனையும், மனநலனையும் கருத்தில் கொண்டு அக்கறையுடன் அரசு எடுத்துள்ள முயற்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












