இராமநாதபுரம், ஆக.19- பொது சுகாதாரத்துறை சார்பில் ரூ.2.59 கோடி மதிப்பில் புதிதாக கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் புதிதாக கட்டிய கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது. நவாஸ் கனி எம்பி முன்னிலை வகித்தார்.
உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வெளி நோயாளி பிரிவு, மண்டபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் செவிலியர் குடியிருப்பு, மண்டபம் முகாமில் ரூ.24 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், காந்தி நகரில் ரூ.20 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், சூசையப்பர் பட்டினத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், மூக்கையூரில் ரூ.25 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், ராமசாமி பட்டியில் ரூ.25 லட்சம் மதிப்பில் செவிலியர் குடியிருப்பு, பரமக்குடியில் ரூ.60 லட்சம் மதிப்பில் கண் அறுவை சிகிச்சை கட்டடம் என ரூ.2.59 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டடங்களை மக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார். அமைச்சர்பேசுகையில், தமிழ்நாடு முதல்வரின் சீரிய திட்டங்களால் பொது சகாதாரத்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், கலைஞர் வருமுன் காப்போம் போன்ற திட்டங்கள் மக்களிடையே நல் வரவேற்பை பெற்றுள்ளது. ராமநாதபுரம், பரமக்குடி பகுதியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது. ராமநாதபுரத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ரூ1.20 கோடி மதிப்பில் கட்டுமான பணி நடைபெற்று வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 267 துணை சுகாதார நிலையங்கள், 59 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 வட்டம் சாரா மருத்துவமனைகள், 7 வட்டார மருத்துவமனைகள், 1 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 1 மண்டல மனநல மருத்துவமனை இருந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருதய பாதுகாப்பு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய் கடி தடுப்பூசி வழங்கப்படுகிறது. கண் அறுவை சிகிச்சைக்கும் உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 25 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் அர்ஜுன் குமார் (ராமநாதபுரம்), இந்திரா (பரமக்குடி), உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுப்புலட்சுமி, என் மனங்கொண்டான் ஊராட்சி தலைவர் கார்மேகம், வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.