தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக நுழையும் விவசாயிகளைத் தடுக்க உத்தரப்பிரதேசம், அரியானா எல்லையில் 5,000க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், துணை ராணுவப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தைத் துவக்கினர்.
விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றுதல், விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்த விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் சம்யுக்தா கிசான் மோர்ச்சார், கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் அறிவித்துள்ளன.
இந்தப் போராட்டம் மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய முற்றுகைப் போராட்டமாக நாளை செவ்வாய்க்கிழமை (13ஆம் தேதி) டெல்லியில் நடத்தப்பட உள்ளது.
இதற்காக இன்று திங்கட்கிழமை காலை முதல் விவசாயிகள் பேரணியாக அரியானாவில் இருந்து பஞ்சாப் வழியாக டெல்லிக்குச் செல்வதாகவும் டெல்லியில் மாபெரும் பேரணி, போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.
இதையடுத்து, விவசாயிகளைச் செல்லவிடாமல் தடுப்பதற்காக அரியானா, உத்தரப்பிரதேச எல்லையில் 5,000க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய சாலைகளில் சிமெண்ட் தடுப்பு வேலிகள் அமைப்பதற்கான பணிகளும் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
அரியானாவின் ஏழு மாவட்டங்களில் இணையச் சேவையை மாநில அரசு துண்டித்துள்ளது. குழு குழுவாக தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தச்சூழலில், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி இன்று திங்கள் காலை 6 மணி முதல் நாளை 13ஆம் தேதி இரவு 11.59 மணி வரை அரியானாவின் 7 மாவட்டங்களில் இணையச் சேவையைத் துண்டிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சர் ஆகிய மாவட்டங்களில் வரும் 13ஆம் தேதி வரை இணையச் சேவை துண்டிக்கப்படும்.
வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் (டுவிட்டர்) போன்ற பல்வேறு சமூக ஊடகத் தளங்கள், கைப்பேசிகள், குறுஞ்செய்தி வழி தவறான தகவல், வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கும்பலாகச் சேர்வதைத் தடுக்கவும் இணையச் சேவைகளை நிறுத்தி வைப்பதாக உள்துறை அமைச்சு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அரியானாவில் உள்ள பல இடங்களில் இருந்தும் டெல்லி நோக்கிச் செல்லும் விவசாயிகளின் ஊர்வலத்தைத் தடுக்கும் வகையில் மாநிலக் காவலர்கள் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
இதனால் அரியானாவில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களில் பஞ்சாப் செல்ல முடியாத அளவிற்கு அரியானா அரசு சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி வருகிறது.
சாலையின் குறுக்கே பெரிய கான்கிரீட் தடுப்புக் கற்களை வைத்துள்ளனர். மேலும், கான்கிரீட் கலவை போட்டு சாலையையும் மறித்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









