இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதுமைப்பெண் திட்டத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்க திட்டத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று துவக்கி வைத்து 1,725 மாணவிகளுக்கு பற்று அட்டை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்க திட்டம் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் விரிவாக்கத்திட்டத்தை தூத்துக்குடியில் இன்று (30/12/2024) துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரியில், உயர்கல்வி பயிலும் மாணவிகள் பயன்பெற புதுமைப்பெண் திட்டத்தின் மூன்றாம் கட்ட துவக்க விழா நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால்வளம், கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி, கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலை, அறிவியல் கல்லூரி, ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, பரமக்குடி அரசு கலைக் கல்லூரி, ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி, அச்சுந்தன்வயல் சேதுபதி கலைக் கல்லூரி, ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதுமைப்பெண் திட்டம் மூலம் படிக்கும் 1,725 மாணவிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் ரூ.1000/- க்கான பற்று அட்டை வழங்கினார். அமைச்சர் பேசுகையில், பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க புதுமைப்பெண் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக்கம் செய்து திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2-ஆம் வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழில் கல்வி ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி கல்வி பயின்று படிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். அரசின் திட்டங்களை பெற்று மாணவிகள் பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தேன்மொழி, முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திக்கேயன், கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் புல்லாணி, முஹமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் நிர்மல் கண்ணன், கீழக்கரை வட்டாட்சியர் ஜமால் முஹமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.
,
You must be logged in to post a comment.