குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய குரூப்-2, குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த செப்.28-ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்த நிலையில், குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று(டிச. 22) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II & IIA பணிகள்) உள்ளடக்கிய பதவிகளின் நேரடி நியமனத்திற்காக 15.07.2025 அன்று அறிவிக்கை வெளியிட்டது. இத்தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு 28.09.2025 நடைபெற்றது. இத்தேர்விற்கு 5,53,634 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேற்படி தேர்வினை 4,20,217 தேர்வர்கள் எழுதினர். இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் 2025-இல் வெளியிடப்படும் என தேர்வாணைய வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறே, மேற்கண்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி, தொகுதி II மற்றும் IIA பணிகளுக்கான முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல்கள் தேர்வாணைய வலைதளத்தில் (www.tnpsc.gov.in) இன்று வெளியிடப்பட்டுள்ளன. தொகுதி IIA பணிகளில் உள்ளடக்கிய பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு (கொள்குறி வகை), தாள்-II (பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு) கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என அறிவிக்கையில் (Notification) தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாகக் காரணங்களுக்காக தொகுதி IIA பணிகளின் தாள்-II ற்கான முதன்மைத் தேர்வு OMR முறையில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள், தேர்வாணைய வலைதளத்தினை (www.tnpsc.gov.in) தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!