அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா; முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்பு..

அச்சன்புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் சிறப்பாக நடந்தது. தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளி 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியின் நூற்றாண்டு விழா தலைமை ஆசிரியர் ஜான் மைக்கேல் அந்தோணி முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி ஆசிரியை ஜெயா வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன், வட்டார கல்வி அலுவலர் முத்துலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்புரை ஆற்றிய முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, பெற்றோர்கள் பணத்தை விடவும் தங்களது குழந்தைகளுடன் நேரத்தை அதிகமாக செலவிட வேண்டும். அவ்வாறு வளர்க்கப்படும் குழந்தைகள் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவார்கள். தினமும் ஒரு வேளையாவது குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும். இது அவர்களுக்கு மொபைல் போன் பயன்பாட்டை தூரமாக்கும். குழந்தைகளின் நலனுக்காக ஆசிரியர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு பெற்றோர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார்.

 

தொகுப்புரை ஆற்றிய தலைமை ஆசிரியர் ஜான் மைக்கேல் அந்தோணி விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாதந்தோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால் தங்களது பள்ளியில் விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மிகக் குறைவு என்றும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சியில் பங்காற்றி உதவி வரும் நன்கொடையாளர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

 

இந்நிகழ்ச்சியில், கல்வி, விளையாட்டு, ஒழுக்கம், பெற்றோர் ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு நூற்றாண்டு விழாவின் போது, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பள்ளியின் சாதனைகள் குறித்த ஆண்டு அறிக்கையை ஆசிரியை சாலிகா பானு வாசித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராஜு மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

 

இந்த நூற்றாண்டு விழாவில், வாவாநகரம் சமூக ஆர்வலர் அப்துல்லா மற்றும் நன்கொடையாளர்கள் அச்சன்புதூர் ரியல் எஸ்டேட் குட்டித் துரை, வாவாநகரம் ஜமாத் தலைவர் அஸ்ஸாதிக், அல் மக்கா ஜவுளிக்கடை அதிபர் ரசூல் மைதீன், முன்னாள் வக்பு கல்லூரி முதல்வர் அலியார் தம்பி என்ற முகமது உசேன், கேரளா கலெக்சன் உரிமையாளர் ரகுமத்துல்லா, முன்னாள் ஆசிரியர் முத்துசாமி, முன்னாள் ஆசிரியர் செய்யது மசூது, பள்ளி மேலாண்மைக் குழுவினர் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!