ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் இன்று நடந்தது. விழாவில்10 பயனாளிகளுக்கு 5,56,045/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பேசுகையில்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச. 2024 வரை 24,334 மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்று அவற்றில் 19,353 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மனவளர்ச்சி குன்றியோர், தசைச்சிதைவு நோயால் பாதித்தோர், கடும் ஊனமுற்றோர், தொழுநோயால் பாதித்தோர், முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 5,120 பேர் ரூ.8.19 கோடி மதிப்பில் பயன் பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியத்தின் கீழ் இயற்கை மரணம். விபத்து மரணம், கல்வி உதவித்தொகையாக 71 குடும்பங்கள் ரூ.8 லட்சம் பெற்று பயனடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழில் புரிய மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் 23 பேருக்கு ரூ.4,78,934/- மானியம் வழங்கப்பட்டது.
அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 340 மாணவ, மாணவியருக்கு ரூ.21,77,000/- வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், இணைப்புச் சக்கரம் பொருத்தி பெட்ரோல் எஸ்கூட்டர், தண்டுவடம் பாதித்தோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள் போன்ற உதவி உபகரணங்கள் ரூ.1.46 கோடி மதிப்பில் 488 மாற்றுத்திறனாளிகள் பெற்று பயனடைந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர் நாள் கூட்டம், முக்கிய நிகழ்ச்சிகள் வாயிலாக மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை ஏற்று தீர்வு வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கள் தேவைகளை தொடர்புடைய அலுவலர்களை அணுகி பயனடைந வேண்டுமென தெரிவித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.