இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின்படி, மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி விடுவிக்கப்பட்டு, மாநில முதலமைச்சர் அப்பொறுப்பை ஏற்றுள்ளார். இது மக்களாட்சி மற்றும் அரசியலமைப்பு தத்துவங்களுக்கு உட்பட்ட ஒரு முக்கிய வெற்றியாகும்.
ஆயினும், ஆளுநர் ஆர்.என். ரவி, தனது அதிகார வரம்பை மீறி, வரும் ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் நீலகிரி ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான மூன்று நாள் மாநாடு நடத்தப்படும் என அறிவித்திருப்பது முற்றிலும் ஏற்புடையதல்ல. இந்த மாநாட்டில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்து, நீதித்துறையின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்திய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருப்பது, இதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
ஆளுநர், சட்டப்படி வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், துணை வேந்தர்களை ஒருங்கிணைத்து இத்தகைய மாநாடு நடத்துவது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதுடன், மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியாகவே கருதப்படுகிறது. இது மக்களாட்சி மற்றும் அரசியலமைப்பு மாண்புகளுக்கு எதிரான ஒரு ஆபத்தான செயலாகும்.
ஆளுநரின் இந்த அதிகார மீறல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாநில அரசின் உரிமைகளையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதித்து, இந்த மாநாட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஆளுநரை வலியுறுத்துவதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை மதித்து, மாநில பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
