சிலிண்டர் வெடித்து 23 பேர் உடல் கருகி பலி; கோவாவில் அதிகாலை பயங்கரம்..

இந்தியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான கோவா மாநிலத்தில், வட கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற இரவு விடுதி ஒன்றில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வட கோவாவில் மிகவும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான பாகா பகுதியில் அமைந்துள்ள ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ (Birch by Romeo Lane) என்ற கிளப்பில் நள்ளிரவு சுமார் 12:04 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கிளப்பின் சமையலறையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததே தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தீ விபத்தில் பலியான 23 பேரில், பெரும்பாலானோர் அந்தக் கிளப்பில் பணிபுரிந்த ஊழியர்கள் ஆவர். இவர்களில் மூன்று பெண்களும், 20 ஆண்களும் அடங்குவர். மேலும், பலியானவர்களில் மூன்று முதல் நான்கு பேர் வரை சுற்றுலாப் பயணிகள் இருக்கலாம் என்றும் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 23 பேரில், மூன்று பேர் தீக்காயங்களால் உயிரிழந்ததாகவும், மற்ற அனைவரும் புகை மூட்டம் காரணமாக மூச்சுத் திணறி உயிரிழந்ததும்  தெரியவந்துள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் பல தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதிகாலை வரை நீடித்த மீட்புப் பணியில், சமையலறைப் பகுதியில் இருந்தே அதிக உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கோவா டிஜிபி அலோக் குமார் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் வட கோவா மாவட்டத்தின் போலீஸ் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தனர்.

கோவா டிஜிபி அலோக் குமார் கூறுகையில், “தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீ விபத்து பெரும்பாலும் தரை தளத்தில் உள்ள சமையலறைப் பகுதியைச் சுற்றியே குவிந்திருந்தது. தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்,” என்றார்.

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின்னர், இந்த துயரச் சம்பவம் குறித்து கடுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். “கோவாவிற்கு இது ஒரு வேதனையான நாள். சட்டவிரோதமாக இதுபோன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து எந்தவித அலட்சியமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அவர் உறுதி அளித்தார்.

பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிதி உதவி

இந்தத் துயரச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது X தளத்தில்,

“கோவாவின் அர்போராவில் நடந்த தீ விபத்து ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது எண்ணங்கள் துணை நிற்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். நிலைமை குறித்து கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் ஜியிடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா ₹2 லட்சம் (ரூபாய் இரண்டு லட்சம்) வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 (ரூபாய் ஐம்பதாயிரம்) வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!