நாம் முற்போக்கா… அல்லது திசை தொலைத்துக் கொண்டிருக்கிறோமா?

இன்றைய இளைஞர்களே,
ஒரு நேர்மையான கேள்வி —
நாம் உண்மையிலேயே முன்னேறிக் கொண்டிருக்கிறோமா?
அல்லது “முற்போக்கு” என்ற பெயரில் வழி தவறிக் கொண்டிருக்கிறோமா?

சுதந்திரம் என்றால் எல்லாம் வெளிப்படுத்தலா?
தனியுரிமை வேண்டும் என்றால் அது பழமையா?
அன்றாட வாழ்க்கையை முழுவதுமாக சமூக வலைதளங்களில் போடாமல் இருந்தால்
நாம் இந்த காலத்திற்கு பொருந்தாதவர்களா?

வீடு இல்லை… எல்லாமே வீதி

ஒரு காலத்தில்,
வீடு — பாதுகாப்பு.
அறை — எல்லை.
உறவு — மரியாதை.

இன்று,
காலை எழுவது முதல் இரவு தூங்குவது வரை
எல்லாமே பதிவு.
எல்லாமே ரீல்.
எல்லாமே பொது வெளி.

அப்பட்டமாகச் சொன்னால்,
அறைக்குள் நடக்கும் அந்தரங்கம் மட்டும் தான் இன்னும் வீதியில் இல்லை.
ஆனால் அதையும் கூட “வியூஸ்”, “லைக்ஸ்”, “வருமானம்” என்ற பெயரில்
பணமாக்க நினைக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

இதுதான் முற்போக்கா?
அல்லது மனித மதிப்புகளின் வீழ்ச்சியா?

*நாம் யாருக்காக வாழ்கிறோம்?*

இளைஞர்களே,
ஒரு கணம் யோசியுங்கள்.

நாம் வாழ்கிறோமா?
அல்லது மற்றவர்கள் பார்ப்பதற்காக நடித்துக் கொண்டிருக்கிறோமா?

“நான் எவ்வளவு ஆடம்பரமாக இருக்கிறேன்”
“என் வாழ்க்கை எவ்வளவு சிறப்பு”
“என்னிடம் என்ன இருக்கிறது”
என்று காட்டுவதற்காகத்தானா இந்த வாழ்க்கை?

அதே சமயத்தில்,
ஒரு பக்கம்
தினக்கூலி வேலை செய்து உயிர் பிடித்து வாழும் மனிதன்.
மற்றொரு பக்கம்
ஒரு வேளை உணவுக்கே வருந்தும் குடும்பம்.

இந்த இடைவெளியை
ஒரு ரீல் நிரப்புமா?
ஒரு பதிவால் மனசாட்சி திருப்தி அடையுமா?

*பெற்றோர் — சுமையா? வழிகாட்டியா?*

இன்றைய காலத்தில்,
பெற்றோர்களின் சொல்லுக்கு மாறு செய்வதே
பெரிய சாதனையாக மாற்றப்பட்டுள்ளது.

“அவர்கள் பழைய தலைமுறை”
“அவர்களுக்கு இன்றைய உலகம் தெரியாது”
என்று சொல்லிக் கொள்வது சுலபம்.

ஆனால் ஒரு கேள்வி —
நீங்கள் இன்று சுதந்திரமாக பேசுகிறீர்களே,
அந்த சுதந்திரத்திற்கு அடித்தளம் போட்டவர்கள் யார்?

அவர்கள் கட்டுப்பாடு வைத்தது
உங்களை அடக்க அல்ல.
உங்களை காப்பாற்ற.

இதையும் புரியாமல்,
மரியாதையைத் துறந்து,
தன்னிச்சையை பெருமையாக பேசுவது
முற்போக்கு அல்ல —
அது அறியாமை.

*Gen Generation” – நாம் இப்படி இருக்க வேண்டுமா?*

இன்றைய தலைமுறை
மரியாதையை மறந்த தலைமுறையாக
வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டுமா?

சுதந்திரம் இருக்க வேண்டும் — ஆம்.
ஆனால் மரியாதை இல்லாத சுதந்திரம்
சமுதாயத்தை கட்டியெழுப்பாது,
அது அதை சிதைக்கும்.

அடக்கம் என்பது பலவீனம் அல்ல.
தனியுரிமை என்பது பின்னடைவு அல்ல.
பண்பாடு என்பது தடையல்ல —
அது அடையாளம்.


*ஒரு கடைசி கேள்வி…*

இளைஞர்களே,
நீங்கள் சமூக வலைதளங்களில்
உங்கள் வாழ்க்கையை காட்டும் முன்
ஒரே ஒரு கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்:

“இதைப் பார்த்து
இந்த சமுதாயம் ஒரு அடி முன்னேறுமா?
அல்லது இன்னொரு அடி பின்செல்லுமா?”

பெரிய வீடு, பெரிய கார், பெரிய ஃபாலோவர்ஸ்
இவையெல்லாம் நாளை மாறிவிடும்.

ஆனால்
மரியாதை, மதிப்பு, மனிதத்தன்மை
இவை ஒருமுறை போனால்
மீண்டும் திரும்ப வராது.

முற்போக்கு என்பது
எல்லாம் வெளிப்படுத்துவது அல்ல.
முற்போக்கு என்பது
எதை வெளிப்படுத்தக் கூடாது என்பதை
தெரிந்து கொள்வது.

ஆசிரியர்

[email protected]

Leave a Reply

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!