கீழக்கரை நகரில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் இளைய சமுதாயம் போதையில் மயங்கி சின்னாபின்னமாகி சீரழிந்து வருகின்றனர். அந்தி மயங்கும் வேளைகளில் தெருவுக்கு தெரு இருள் சூழ்ந்த பகுதிகளில் உலவும் கஞ்சா வியாபாரிகளிடம் தங்கள் பொன்னான எதிர்காலத்தை தொலைத்து வருகின்றனர்.
இதனால் இன்று வீட்டுக்கு வீடு கஞ்சா அடிமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கீழக்கரை நகரில் படு ஜோராக எவ்வித அச்சமும் இல்லாமல் தொழில் நடத்தும் இந்த இரக்கமில்லாத கஞ்சா வியாபாரிகளிடம் சிக்கும் தங்கள் பிள்ளைகளை, திருத்தி நல்வழி படுத்திட முடியாமல் ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர்கள் தினமும் இரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொடி கட்டி பறக்கும் இந்த கஞ்சா மற்றும் போதைப்பொருள்களை முற்றிலும் ஒழிக்க கோரியும், இந்த அபாய போதை பொருள்களை சர்வ சாதாரணமாக விற்பனை செய்து வரும் தேச விரோத ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்(போதை தடுப்பு பிரிவு) அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள், ஆகியோரை கீழக்கரையை சேர்ந்த சமூக நல அமைப்பினர் சந்தித்து இன்று மனு அளித்தனர்.
இந்த நிகழ்வில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், மக்கள் நல பாதுகாப்புக் கழகம், கீழக்கரை நகர் நல இயக்கம், இஸ்லாமிய கல்வி சங்கம்(A I E), சட்டப் போராளிகள் இயக்கம், வடக்குத்தெரு சமூக நல அமைப்பு(N A S A) அரசியல் கட்சியினர் SDPI கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சமூக அமைப்பினர் கலந்து கொண்டு மனு அளித்தனர். அதுமட்டுமல்லாது கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக 60 க்கும் மேற்பட்ட ஆன்லைன் பெட்டிசன்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த மனுவில் ”இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கஞ்சா மற்றும் போதைப் பொருள்களின் வியாபாரம் எவ்வித அச்சமும் இன்றி நடைபெற்று வருகிறது. கீழக்கரை நகர் பகுதிகளான புது கிழக்குத் தெரு, முஹம்மது காசீம் அப்பா தர்ஹா பகுதி, சிவகாமிபுரம், பட்டாணி அப்பா தர்ஹா பகுதி, கீழக்கரை டி.எஸ்.பி அலுவலக பின்புறம், கஸ்டம்ஸ் ரோடு வள்ளல் சீதக்காதிவசந்த மாளிகை பகுதி, சாலை தெரு 18 வாலிபர்கள் தர்ஹா பகுதி அருகாமை, கலங்கரை விளக்கம் பகுதி, அஞ்சு வாசல் கிட்டங்கி பகுதி உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருள் படு ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரிகள் எந்த பயமோ தயக்கமோ இல்லாமல் தைரியமாக வெளிப்படையாகவே செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கீழக்கரை நகரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து நடைபெற்று வரும் இந்த போதை பொருள் வியாபாரத்தால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பலர் போதைக்கு அடிமையாகியுள்ளனர். இதனால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆவதோடு நம் தேசத்தின் நலனும், சீர்மிகு மனித வளமும் சீர்கெட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது பள்ளி கல்லூரி அருகாமையில் பான்பராக், குட்கா, சைனி கைனி, போதை புகையிலை வஸ்துக்கள் விற்பனையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது .

இது சம்பந்தமாக 04.04.2018 நாளிட்ட தினகரன் நாளிதழ் மதுரை பதிப்பில் (கீழக்கரையில் மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?) என்கிற தலைப்பில் செய்தி வெளியாகி மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆகவே பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு குடும்பத்தை சீரழிக்கும் இந்த கஞ்சா வியாபாரத்தை முற்றிலும் ஒழித்திட சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










ஆப்பக்கடை ஆப்பக்கடை நீங்க மனு கொடுத்த சீர்மிகு காவாலி துறையே ஆப்பக்கடையில் ருசி கொண்டு தேவையானவையை வாங்கிக்கொண்டு போகிறார்களே லெட்டர் பேடுகளா
முதலில் அவர்களின் பிடியில் இருக்கும் நகராட்சி கழிப்பறையை மீட்கப்பாருங்க லெட்டர் பேடுகளா, அதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள் “விடயமே அங்கேதான் இருக்கிறது”