“ஞானவாபி மசூதி” இருக்கும் இடத்தில் கோயிலை கட்டுவோம்:-அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்ச்சை பேச்சு..

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அனைத்து கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி பிரதமர் மோடி வெறுப்பு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மேற்கொள்ளும் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி மதம் சார்ந்து பேச்சுகள் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்து – முஸ்லீம் பிரிவினைவாத பேச்சுகளும் பேசி வருகின்றனர் பாஜகவினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமியர்கள் குறித்து பெரும் அவதூறு பேச்சை பேசிய மோடிக்கு கண்டனங்கள் குவிந்தது.

மேலும் பாஜக வேட்பாளர் ஒருவர் இராம நவமியன்று மசூதியை நோக்கி வில் அம்பு எய்வது போல் செய்கை காட்டிய வீடியோ வெளியாகி கண்டனங்கள் எழுந்தது. தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பி, வெறுப்பு பிரசாரத்தை மட்டுமே பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர். பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான அரசு என்பதை ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்தி வருகிறது.

அதனை உண்மை என்று நிரூபிக்கும் விதமாக மீண்டும் சர்ச்சைக்குரிய பேச்சை பேசியுள்ளார் பாஜக ஆளும் மாநில அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா. அசாமில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா, பாஜக மீண்டும் வென்றால் மசூதி இருக்கும் இடத்தில் கோயில் கட்டப்படும் என்று பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, “கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 300 இடங்களை வென்றோம், அயோத்தியில் இராமர் கோயிலை கட்டினோம். இந்த முறை 400 இடங்களில் வென்ற பிறகு, மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மக்கள் பார்ப்பார்கள். அதேபோல் வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் பாபா விஸ்வநாத் கோயிலையும் கட்டுவோம்” என்றார்.

இவரது இந்த பேச்சு தற்போது மேலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. ஏற்கனவே பாபர் மசூதி இருந்த இடத்தில் தற்போது இராமர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில், மோடி போட்டியிடும் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் பாபா விஸ்வநாத் கோயிலை கட்டுவதாக பாஜக முதல்வர் பேசியுள்ளது பாஜகவின் உண்மை முகத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!