தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு உள்ள இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழக அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு 3644 காலிப் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை 21.08.2025 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. இந்த இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வானது வரும் 09:11:2025 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு (அ) அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 21.09.2025 ஆகும். கூடுதல் விவரங்களை www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த தேர்வுக்கு தயாராகும் தென்காசி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் (KFC கடை பின்புறம்) தென்காசியில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 10.09.2025 புதன் கிழமை காலை 10.30. மணிக்கு துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் TENKASI EMPLOYMENT OFFICE என்ற Telegram சேனலில் கொடுக்கப்பட்டுள்ள Google படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் 04633-213179 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. இந்த தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.