எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து நடுக்கடலில் விசாரணை !

ராமநாதபுரம் ஜன 16, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த இரண்டு விசைப்படைகளும் அதிலிருந்து 18 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் தாழ்;வுபாடு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செவ்வாய்க்கிழமை காலை கடலுக்கு புறப்பட்டனர். மீனவர்கள் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் பகுதியைச் சேர்ந்த இரண்டு விசைப்படகையும், அதிலிருந்த விஜயகுமார், ஆரோக்கியம், யோகம், பிச்சை, இன்னாசி, ஸ்வீடன் உள்ளிட்ட 18 மீனவர்களை கைது செய்து மன்னார் தாழ்வுபாடு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கடற்படை முகாமில் மீனவர்களுக்கு முதல் கட்ட மருத்துவ சிகிச்சை அளித்து பின்னர் மன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் 18 பேரும் நாளை புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என இலங்கை கடற்படையினரால் தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் புதுக்கோட்டை, நாகை ராமநாதபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த 40 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!