ஃபென்ஜால் நிவாரணப் பணிகளுக்கு துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர்…

ஃபென்ஜால் நிவாரணப் பணிகளுக்கு துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர். ரூ.1.30 கோடிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் ஃபென்ஜால் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம். கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தங்களது சட்டமன்ற உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 5.12.2024 அன்று தலைமைச் செயலகத்தில், அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தமிடம் வழங்கினார்.

மேலும், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

அதன்படி, துணை முதல்வர், அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரின் ஒரு மாத ஊதியமான 1 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்து 750 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகள்/காசோலைகளை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்றையதினம் முதல்வரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் உடனிருந்தார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!