வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதில் இருந்தும் திரண்ட விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி (நவம்பர் 30) பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை தர வேண்டும், சுவாமிநாதன் குழு அறிக்கையை அமலாக்கம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், தொழிலாளர் சங்கங்கள் என 207 சங்கங்களைக் கொண்ட கூட்டமைப்பின் சார்பில், டெல்லியில் இரு பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்டபடி இரண்டாவது நாள் விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், பிகார், ஒடிசா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடைபெற்ற பேரணியில் ஈடுபட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி ஸ்தம்பித்துக் காணப்பட்டது.
தமிழக விவசாயிகள்டெல்லியில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 25 பெண்கள் உட்பட 1,300 பேர் தமிழகத்தில் இருந்து பங்கேற்றுள்ளனர். டெல்லியில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வந்தனர்.
பேரணியில் அய்யாக்கண்ணு, “தமிழக விவசாயிகள் ஏற்கனவே டெல்லியில் 141 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அன்று ஜந்தர் மந்தரில் நாங்கள் தொடங்கிய போராட்டம் இன்று இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகளைத் திரள வைத்துள்ளது. விவசாயிகளைத் தடுக்க மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் டெல்லியில் குவிக்கப்பட்டிருகிறார்கள்.
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை 3 கிமீ நிர்வாணமாகச் செல்ல உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். பேரணியின் முக்கிய கோரிக்கை விவசாயிகளின் பிரச்சினையை விவாதிப்பதற்காக உடனடியாக 3 வார நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதாகும்.
பேரணியில் முன்னாள் பிரதமர்:- நள்ளிரவு வரை நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகௌடா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி விவசாயிகள் பிரச்சினையை கருத்தில் கொள்ள வேண்டும்.. விவசாயிகளுக்கு தற்போது எல்லாம் தெரியும். எந்த ஒரு அரசும் விவசாயிகள் இல்லாமல் இருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
இந்தப் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இதே போன்று டெல்லியில் தடையை மீறி பேரணி நடத்திய போது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் காவல்துறையினர் விவசாயிகளை விரட்டி அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி தொகுப்பு:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










