ராமநாதபுரத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடத்த முயன்ற வைகை விவசாயிகள் சங்கத்தினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஒன்று கூடிய 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் மழையால் நோய் பாதி கருகல் நோய் தாக்கி பாதிக்கப்பட்ட மிளகாய் செடிகளில் முளைத்த மிளகாய் வற்றல்களை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக ராமநாதபுரம் ரயில் நிலையத்தை நோக்கி சென்றபோது தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது வழக்குப்பதிந்துள்ள மத்திய அரசை கண்டித்தும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணத் தொகை மற்றும் தேசிய வேளாண் காப்பீட்டில் நுாறு சதவீதம் வழங்க வேண்டும்.
தொடர் மழை, நோயால் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகையும் மற்றும் தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்க வலியுறுத்திவைகை விவசாயிகள் சங்க தலைவர் பாக்கியநாதன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிவாரணம் வழங்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து ஊர்வலமாக சென்று ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ரயிலை மறித்து போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாததால், ரயில் நிலையத்தை நோக்கி முன்னேறி சென்ற சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ்நாடு வைகை விவசாயிகளை கைது செய்த காவல்துறையினர் அவர்களை வேன்களில் ஏற்றி தனியார் மஹாலில் அடைத்து வைத்துள்ளனர்.
You must be logged in to post a comment.