வக்ஃபு சட்டத் திருத்தமானது சிறுபான்மை இசுலாமிய இன மக்களை வஞ்சிப்பதாக அமைந்துள்ளதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதற்கான தீர்மானத்தை இம்மாமன்றத்தில் நான் முன்மொழிய இருக்கிறேன் என்பதை முன்னுரையாகத் தெரிவித்துக்கொள்கிறேன். வக்ஃபு சட்டமானது 1954-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இன்றைய ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசு சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முன்வரைவினைக் கடந்த 8-8-2024 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வக்ஃபு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாகவும், மத உரிமைகளைப் பாதிப்பதாகவும் ஒன்றிய அரசின் சட்டத் திருத்தங்கள் இருந்ததால் அதனை தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடுமையாக எதிர்த்தோம். எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு இதனை அனுப்பினார்கள். இந்தச் சட்டத்தை நாம் எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வக்ஃபு சட்டத்தைத் திருத்துவதன் மூலமாக ஏற்படும் மோசமான விளைவுகள் சிலவற்றை இம்மான்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். வக்ஃபு சட்டத்தை ஒன்றிய அரசு திருத்த நினைக்கிறது. இதன் மூலம் மத்திய வக்ஃபு கவுன்சில் மற்றும் மாநில வக்ஃபு வாரியங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு, அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இது வக்ஃபு நிறுவனங்களின் சுயாட்சியைப் பாதிக்கும். அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்ஃபு சொத்து, இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன் அல்லது பின் என்றாலும் வக்ஃபு சொத்தாகக் கருதப்படாது என்று இந்தச் சட்டம் கூறுகிறது. இது அரசுக்கு சொத்துக்களை மறுவகைப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கிறது. *“ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் இஸ்லாமை பின்பற்றிய ஒரு நபர் மட்டுமே வக்ஃபு அறிவிக்க முடியும்” என்று கட்டுப்படுத்துகிறது. இது முஸ்லிம் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட வக்ஃபுகளைச் செல்லாதது என்று ஆக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்குகிறது. இசுலாமிய மக்களில் இரண்டு குறிப்பிட்ட வகுப்பினருக்குத் தனி சொத்து வாரியம் உருவாக்க முயற்சி செய்கிறார்கள். மாநில வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் தேர்தல் முறையானது இரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில வக்ஃபு வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டுமென்று இந்தச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இது முஸ்லிம்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும்!


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









