வஃக்ப் -திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப் – திருடர்களும்..! திருத்தங்களும்..!

வஃக்ப் புரிதல்-1

வஃக்ப் என்றால் என்ன? வஃக்ப்பின் நன்மைகள் என்ன? வஃக்ப்பின் பயன்கள் என்ன? வஃக்ப் யாருக்கானது? வஃக்ப் செய்வதின் நோக்கம் என்ன?

என்ற பல கேள்விகள் இப்போதுதான் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.

வஃக்ப்பின் முழுப் பரிமாணங்களை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள இந்த சர்வாதிகார சட்ட திருத்தம் வழி செய்திருக்கிறது.

இந்த வஃக்புகளின் நிலைகளை இரண்டு பிரிவுகளாக நாம் புரிய வேண்டும்.

1 . வஃக்ப்பின் முழு நிலைகளை அதன் பயன்களை,அதன் பொறுப்புகளில் இருந்து கொண்டும், வெளியிலிருந்தும் ஆக்ரமித்து முறையற்ற வழிகளில் பயனடையும் திருடர்கள்.

2.முஸ்லிம்களின் ஒற்றுமையற்ற, புரிதலற்ற, நிலைகளைப் பயன்படுத்தி அவர்களின் வஃக்ப் சொத்துக்களை பறித்துக் கொள்ள முயற்சிக்கும் அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளை மறுக்க‌ முயற்சிக்கும் வஃக்ப் சட்டத்திருத்தம்.

இறைவன் அருளிய கல்வி,அறிவு, பொருளாதாரம், அதிகாரம் போன்றவைகள் எல்லோருக்கும் சமமாக இருப்பதில்லை.

இதுபோன்ற வளங்களை(Sources) இல்லாதோருக்கு பகிர்ந்து அளிப்பதே உயர்ந்தகொடையாக இருக்கிறது.

இஸ்லாமிய வழிகாட்டலில் வழங்கப்படும் கடமையான ஜகாத், மேலும் நன்மை கருதி அளிக்கப்படும் ஏனைய கொடைகள் அனைத்தும் பிறருக்கு பயனையும் வழங்குபவர்களுக்கு ஆயுள் நீட்சியையும், பொருளாதாரத்தில் பெருக்கத்தையும் தருவதாக கூறப்படுகிறது.

இதுபோன்று மனிதன் தனது இறப்பிற்கு பிறகும் தனக்கான நன்மைகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற நியதியில்,

தனது சொத்துக்களை அதன் வருமானங்களை அதன் பயன்களை மக்களின் பொதுப் பயன்பாட்டில் உள்ள மஸ்ஜிதுகள், மதரஸாக்கள், கபர்ஸ்தான்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், நீர்நிலைகள் என வஃக்ப் என்னும் அர்ப்பணம் செய்து விடுவதால் அதன் பரிமாணங்கள் கூடிக்கொண்டே போகிறது.

விலங்குகள், பறவைகள், போன்ற பிற உயிரினங்களுக்கு உணவு அளிக்க கூட வஃக்ப் செய்யப்பட்டு இருப்பது மனிதநேயத்தின் உச்சமாக கருதலாம்.

எகிப்து நாட்டின் கெய்ரோவிலுள்ள அல்-அஸ்ஹர் பல்கலைகழகம், மொரோக்கோவில் உள்ள அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம் போன்ற உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு, உலகின் பல நாடுகளில் வஃக்ப் செய்யப்பட்ட சொத்துக்கள், அவைகளுக்கு பயனளித்து வருகின்றன.

வஃக்ப் என்பது தொடர் நன்மையை தரும் ஒரு உயர்ந்த கொடையாக இருந்தாலும், அது மனித நேயத்தின் உயர்ந்த நிலையாகும்.

ஆகவேதான் நாடுகளை கடந்து மொழிகளை கடந்து வஃக்ப் என்ற ஒரு கருத்தியல் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு வரமாய் அமைந்துள்ளது.

வஃக்ப்பின் பல பரிணாமங்களை தொடர்ந்து பேசுவோம்.!

கவிஞர், கப்ளிசேட்!

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!