வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..!
(ஒரு சிறிய தொடர்)
வஃக்ப் புரிதல் -9
ஒவ்வொரு வஃக்ப் நிறுவனத்திற்கும் ஏராளமான சொத்துக்கள் இருந்தாலும் அதன் முழுப் பயன்கள் முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை.
முறையாக ஆவணப் பதிவுகள் இல்லாததும், வஃக்ப்களை நிர்வகித்த வர்களுக்கு அதைப்பற்றிய புரிதல்களும், ஆர்வங்களும் இல்லாததால் ஏராளமான வஃக்ப் சொத்துக்களை எளிதாக பலர் ஆக்ரமித்துக் கொண்டனர்.
ஏராளமான நிலங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டு இருந்தாலும், நாளடைவில் குத்தகைதாரர்கள் எந்த வருமானங்களும் தருவதில்லை.
மழை இல்லை விளைச்சல் இல்லை பூச்சி விழுந்து பயிர்கள் நாசமாகி விட்டது. வெள்ளப்பெருக்கு என அவ்வப்போது ஏதாவது காரணங்கள் மூலம் குறையத் தொடங்கிய வஃக்ப் நிலங்களின் வருமானங்கள், ஒருகட்டத்தில் அது முற்றிலும் இல்லாமல் ஆகிவிட்டது.
வஃக்பின் நிர்வாகிகளாலும் அதனை முறையாக வசூல் செய்ய முடியாமலும், நிலத்தை மீட்க முடியாமலும் சண்டைகள், தகராறுகள் என ஆரம்பித்து இறுதியில் அது நீதிமன்றங்களுக்குப்போய் அது சிவில் வழக்காக பல ஆண்டுகளாக இழுத்தடிக்க படுகிறது.
இதனால் வீண் செலவுகளும், நிர்வாகங்களுக்கு அலைச்சலுமே ஏற்பட்டு இறுதியில் ஏதோ நடக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்.
பழைய வஃக்ப் சட்டங்கள் அமலில் இருந்தபோது வஃக்ப் சொத்துக்களின் வாடகைகள், குத்தகைகள் மற்றும் வஃக்ப் சொத்துக்களை, வஃக்ப் வாரிய அனுமதியோடு பயனுள்ளதாக பயன்படுத்த பல கதவுகள் திறந்து இருந்தன.
வஃக்ப் சொத்துக்கள் ஆக்ரமிப்பை பொறுத்தவரை முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி எல்லோரும் ஆக்ரமித்து வைத்து இருக்கின்றனர்.
பொதுவாக விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தவர்கள் நாளடைவில் அந்த சொத்துக்களை உடமையாக்கி கொள்ள முயற்சிக்கின்றனர்.
விளைநிலங்களை மார்கட் விலையில் பணம் பெற்றுக்கொண்டு, நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு அவர்களுக்கே உரிமையாக்கவும் செய்கிறார்கள். அவர்களுக்கு ஆவணமாக பதிந்து கொடுக்க முடியாவிட்டாலும், ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு சொந்தமாக்கி விடுகின்றனர்.
நல்ல கடைத்தெருவில் அதிகமதிப்போடு இருக்கும் கடைகளுக்கு மிக குறைந்த வாடகையே வசூலிக்கப்படுகிறது.
இவர்கள் எல்லாம் காலம் காலமாக அந்த இடங்களில் இருந்து வருவதால், நிர்வாகங்கள் இவர்களிடம் அதிக வாடகையை வசூல் செய்ய முடிவதில்லை. இவர்கள் காலி செய்தும் கொடுப்பதில்லை.
இவர்கள் மற்றொரு தந்திரமாக அதிக உள்வாடகைக்கு விட்டு, தாங்கள் குறைந்த வாடகையை பள்ளிகளின் நிர்வாகங்களுக்கு கொடுக்கிறார்கள்.
கடையை காலி செய்ய நினைப்பவர்கள், மிக அதிக தொகையை பகுடியாக (Good will) பெற்றுக் கொண்டு,
நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு வாடகைதாரர் பெயர் மாற்றி கொடுத்து விடுவார்கள். இதில் நிர்வாகிகளுக்கும் பங்குகள் போய்விடுகிறது.
விதிமீறல்கள் நடைபெறும்போது, தங்களுக்கு பங்குகள் கிடைக்காத நிர்வாகத்தின் எதிரணியிர் அதனை வஃக்ப் வாரியத்திற்கு தெரியப் படுத்துகின்றனர்.
ஆய்வுக்கு வரும் வஃக்ப் அதிகாரிகளை சரிக்கட்டி தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கின்றனர்.
இந்த வஃக்ப்நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் முஸ்லிம்களாக இருந்தே இதுபோன்ற அநியாயங்கள் அரங்கேறுகிறது.
இதில் அல்லாஹ்விற்கு பயந்து நீதி நேர்மையோடு நடக்கும் நிர்வாகிகளும் இருக்கவே செய்கிறார்கள்.
வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்…!
கவிஞர்,கப்ளிசேட்!