வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..!
(ஒரு சிறிய தொடர்)
வஃக்ப் புரிதல் -8
வஃக்ப் கவுன்சிலில் 1954 ஆம்ஆண்டு இயற்றப்பட்ட சட்டமே நடைமுறைப் படுத்தப்பட்டது.
மத்திய வஃக்ப் கவுன்சிலில் 20 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போது புதிய வாரியமும், புதிய உறுப்பினர்களும் நியமிக்கப்படுவது வாடிக்கையாகிப் போனது.
இதற்கு காரணம் வஃக்ப்பில் இருந்த ஏராளமான சொத்துக்களும் அதிலிருந்து கிடைத்த வருமானங்களுமே காரணமாகும்.
அரசியல் செல்வாக்குள்ள முஸ்லிம் தலைவர்கள் வஃக்ப் வாரியத்தில் உறுப்பினர்களாக இணைய முயற்சி செய்தனர்.
1995 ஆம்ஆண்டு பரவலாக செய்யப்பட்ட புதிய ஆய்வுத் தரவுகளின் படி, புதிய சட்டம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டது
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமானம் வரும் வஃக்ப்புகள், தமிழ்நாடு வஃக்ப் வாரியத்திற்கு சொத்துக்களின் வருமானத்தில் ஏழு சதவீதம் சகாயத் தொகையாக செலுத்தவேண்டும். மற்றும் எல்லா ஆவணங்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டும்.
குறிப்பிட்ட தொகைக்கு கீழே வருமானம் உள்ள வஃக்ப்புகள் சகாயத்தொகையை செலுத்தத் தேவையில்லை.
வஃக்ப் குழுவிடம் கடன் வாங்கும் வஃக்ப் நிறுவனங்கள் 6% தொகையை கல்விக்காக நன்கொடை வழங்க வேண்டும்.
கடனை திருப்பி செலுத்தும் போது கிடைக்கும் வருவாயில் 40% கல்விக்காக செலவு செய்ய வேண்டும்.
கல்வி நிதியம் அமைத்து ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்ய வேண்டும்.
தொழில் கல்வி, தொழில்நுட்ப கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு மாதம் 6000 ரூபாயும் பட்டப்படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மாதம் 3000 ரூபாயும் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், அவைகளை முறையாக வழங்கப்படுவதாக தெரியவில்லை.
முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தொழிற்பயிற்சி அமைக்க கடனுதவி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
வஃக்ப் நிதிகளின் மூலம் கல்வி வளர்ச்சிக்கு செலவு செய்யவேண்டும் என்ற விதிமுறைகள், மற்றும் நியதிகள் இருந்தாலும், இதுபோன்ற சிறப்பு முன்னெடுப்புகள் எங்கும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஜனாப்.ஹைதர் அலி அவர்கள் வஃக்ப் வாரியத்தலைவராக இருந்த போது அந்தந்த பள்ளிவாசல்களின் அனைத்து வஃக்ப் சொத்துக்களையும்,
வாடகை வருமானங்கள், மற்றும் கிடைக்கும் குத்தகை வருமான விபரங்கள், வாடகைதாரர்களின் பெயர்கள்,
குத்தகைதாரர்களின் பெயர்கள்,என அனைத்தையும் வெளிப்படையாக எழுதி வைக்க உத்தரவிட்டார்.
அப்போதுதான் அந்த மொஹல்லா மக்களுக்கு அந்த பள்ளிவாசல்களின் சொத்து விபரங்கள் தெரிய வந்தது.
வஃக்பின் சொத்துக்களின் வருமானங்கள் மூலம் முழுப் பயன்கள் ஏழை மக்களுக்கு முழுமையாக கிடைக்கிறதா? என்பதை யோசிக்க வேண்டும்.
வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்..!
கவிஞர், கப்ளிசேட்!