வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..!
(ஒரு சிறிய தொடர்)
வஃக்ப் புரிதல் -7
வஃக்ப் என்பது சொத்துக்களுடன் அதிகம் பிணைந்து இருப்பதால், அதில் அதிக ஆக்கிரமிப்புகளும், அத்துமீறல்களும், லஞ்சங்களும், ஊழல்களும், என முறைகேடுகள் சாபக்கேடாய் முன் நிற்கின்றன.
வஃக்ப்பின் இஸ்லாமிய சட்டங்களையும், அதையொட்டி இயற்றப்பட்டுள்ள இந்திய வஃக்ப் சட்டங்களையும், உலக அளவிலுள்ள வஃக்ப் சட்டங்களையும் ஆலிம்களும் ஆர்வமுள்ளவர்களும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் நல்ல நிலையில் உள்ளபோது வஃக்ப் செய்துவிட்டு, அவருக்கு பொருளாதார சிக்கல்கள் வரும்போது அதனை திரும்ப பெற முடியாது.
வஃக்ப் செய்தவர்களின் வாரிசுகளும் எந்த நிலையிலும் அதற்கு உரிமை கோர முடியாது.
இந்திய நீதிமன்றம், அப்துல் ஃபத்தாஹ்தீன்VS ராமையா வழக்கில், (1894) வஃக்ப்பின் வருமானம் குடும்பத்திற்கு எனவும், அவர்களுக்கு பிறகு வாரிசுகள் இல்லையெனில் அது பொது மக்களுக்கானது என்று அறிவிக்கும் வஃக்பை, செல்லாது என்று தீர்ப்பளித்தது.
இதுபோன்று இன்னும் பல வழக்குகளின் தீர்ப்புகள் ஷரியத் சட்டத்திற்கு முரணாக அமைந்தது.
இதனால் முஸ்லிம்கள் ஷரியத்திற்கு முரண்படாத சரியான வஃக்ப் சட்டத்தை இயற்ற இந்திய அரசை கேட்டுக் கொண்டதால் 1913 ஆம் ஆண்டு வஃக்ப் சட்டம் இயற்றப்பட்டது.
அதன்பிறகு வஃக்ப் செய்திருந்த சொத்தில் இருந்து தனது வாழ்நாள் முழுவதும் தனது பராமரிப்பிற்கும், பிறகு கடன் இருந்தால் அவரின் கடனுக்கும் அதன் தொகைகள் செலுத்தப்பட்டாலும், அந்த வஃக்ப் கூடும் என்று இந்திய சட்டத்தின் மூலம் தெளிவானது.
வஃக்ப் செய்யப்பட்ட சொத்துக்களை அதை பராமரிக்கும் ஜமாஅத், மற்றும் முத்தவல்லிகள் அந்த சொத்துக்களை வீணாக்கிவிடாமல் பராமரிக்க வேண்டும்.
பொது அற நோக்கங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட சொத்துக்களின் பயன்பாடுகள் வஃக்ப் செய்தவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.
வஃக்ப் செய்யப்பட்ட சொத்தை பராமரிக்க வஃக்ப் செய்தவரே பொறுப்பாளரை நியமிக்கலாம்.
அவர் நியமிக்காவிட்டால் சொத்தை பொறுப்பேற்றவர் நியமிக்கலாம்.
அதுவும் இல்லை எனில் ,நீதிமன்றம் தலையிட்டு அந்த சொத்திற்கு பொறுப்பாளரை நியமிக்கலாம்.
பழைய தமிழக வஃக்ப் சட்டப்படி, தமிழக வஃக்ப் வாரியத்திற்கு 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள்
அதில் 2 முஸ்லிம் MP க்கள்,2 முஸ்லிம் MLA க்கள், இரண்டு முஸ்லிம் வழக்கறிஞர்கள், ஷியா,சன்னி பிரிவுகளை சேர்ந்த இருவர்,சமூக ஆர்வலர் ஒருவர், IAS அதிகாரி ஒருவர், இரண்டு முத்தவல்லிகள் என வஃக்ப் வாரியம் இந்த உறுப்பினர்களோடு செயல்படும்.
தமிழ்நாடு வஃக்ப் சட்டம் 1954 ஆண்டு இயற்றப்பட்டது. வஃக்ப் சொத்துக்களை பராமரிக்கும் முத்தவல்லிகள், வஃக்ப் சொத்துக்களை சரியாக பராமரிக்கவும்,
வஃக்ப் வாரியத்திற்கு கணக்குகளை, தரவுகளை தெரியப்படுத்துவதும், வஃக்பிற்கான தொகைகளை அளிப்பதும், வேண்டிய தகவல்களை வழங்குவதும் அவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
வஃக்ப் சட்டத்திற்கு உட்பட்டே வஃக்ப் வாரியமும், முத்தவல்லிகளும், சொத்துக்களை நிர்வகிக்க வேண்டும்.
11உறுப்பினர்களைக்கொண்டு 1958 ஆம் ஆண்டு வஃக்ப் வாரியம் தொடங்கப்பட்டு,1966 ஆம்ஆண்டு கலைக்கப்பட்டு, 1971 ஆம்ஆண்டு மீண்டும் நிறுவப்பட்டது. மீண்டும் மூன்றாவது முறையாக 1984 ஆம்ஆண்டு திருத்தப்பட்ட வஃக்ப் சட்டம் இயற்றப்பட்டது.
வஃக்ப் வாரியம் மற்றும் அதன் சட்டங்களை அறிந்து கொள்வதின் மூலம் முஸ்லிம் சமூகம் தனது பொறுப்புகளையும், கடமைகளையும் புரிந்து கொள்ள முடியும்.
வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்..!
கவிஞர், கப்ளிசேட்!