வஃக்ப்-திருடர்களும்…! திருத்தங்களும்..!
(ஒரு சிறிய தொடர்)
வஃக்ப் புரிதல் -6
இந்தியாவில் வஃக்ப் சொத்து சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் வழக்கமான சட்டப்படியான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டபோது, அது வஃக்ப்பின் நோக்கத்தை சிதைப்பதாக இருந்தது.
அந்த தீர்ப்பு வஃக்பு சொத்துக்களுக்கான தனி சட்டங்கள் இயற்றுவது அவசியம் என்று புரியவைத்தது.
வஃக்ப் சொத்து ஒப்படைப்பு என்பது ஷரியத் ரீதியான நோக்கு (Religious Intension) கொண்டதாக இருக்க வேண்டும்.
ஷரியத் ரீதியான நோக்கு இல்லாமல் சொத்துக்கள் ஒப்படைக்கப்பட்டால், அது டிரஸ்ட் (Trust) என்ற பொறுப்புரிமையாக ஆகுமே தவிர,அது வஃக்பாக இருக்க முடியாது.
வஃக்ப் அர்ப்பணிப்பு என்பது நிரந்தரதன்மை உடையதாய் இருக்கவேண்டும்.
நிரந்தர தன்மையில்லாத சொத்து ஒப்படைப்பு, சதகா என்ற தர்மமாக இருக்குமே தவிர ஒருபோதும் வஃக்பாக முடியாது.
வஃபின் நுகர்வு, தொடர்ந்து பொதுநலன்களுக்கு பயன்படுவதாக இருக்கவேண்டும்.
வஃக்ப்பின் சட்டங்களை, அதன்வகைகளை, வஃக்ப் வாரியங்களை அதன் அமைப்பு முறைகளை, உலமாக்களும், பொதுநலனில் அக்கறையுடைய மக்களும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
மக்களை ஆன்மீக ரீதியாக வஃக்ப் செய்ய ஆர்வமூட்டும் ஆலிம் பெருமக்கள், அதன் நடைமுறை சட்டங்களையும், அறிந்து வைத்துக்கொள்வது அவசியமானதாகும்.
மக்களுக்கு ஆலிம்கள் வழியே சென்று சேரும் செய்திகளில் அதிகம் நம்பகத்தன்மை இருக்கிறது.
இந்தியாவில் வஃக்ப் செல்லுபடியாகும் சட்டம்,ஆங்கிலேயர் காலத்திலேயே 1913 ஆம் ஆண்டே இயற்றப்பட்டு, வஃக்ப்பிற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளன.
வஃக்ப் முழுமை பெறுவதற்கு கீழ்காணும் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன
1.நிலையான அர்ப்பணம்
2.வஃக்பை அறிவித்தல்
3.உயில் மூலம் வஃக்ப் செய்தால் அவரின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே செய்ய முடியும்.
இது பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் காட்டித் தந்த தூர நோக்கு மிகுந்த வழிமுறையாகும்.
இது ஒருவர் தனது முழு சொத்தையும் வஃக்ப் செய்துவிட்டு அவரின் வாரிசுகள் சொத்தில் இருந்து உரிமையற்றவராய் ஆவதிலிருந்து தடுக்கிறது.
4.நிரந்தர தன்மையுடையது. சில வழிகாட்டுதல்கள்படி இடம் பெயரும் சொத்துக்களை வஃக்ப் செய்ய முடியாது எனக்குறிப்பிட்டு இருந்தாலும், அவற்றை வஃக்ப் செய்வது நீண்ட கால நடைமுறையாக இருந்து வருகிறது.
வஃக்ப் அளிப்பவருக்கு வாகிஃப் என்று பெயர் குறிப்பிடப்படுகிறது.
இதுபோன்று முறையாக சேமிக்கப்பட்ட வஃக்ப் சொத்துக்களைதான் முறையற்ற வகையில் ஆக்ரமிப்புகள் செய்து அனுபவிக்கும் நிலையில் இன்று சட்டம் போட்டு களவாட திட்டமிடப்படுகிறது.
வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்..!
கவிஞர், கப்ளிசேட்!