வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..!
(ஒரு சிறிய தொடர்)
வஃக்ப் புரிதல் -4
இந்தியாவில் ஏறக்குறைய 800 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த முஸ்லிம் சமூகம், கல்வியறிவில் சிறப்பு பெற்றிருந்த சமூகம், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்திருந்த சமூகம்,பல கட்டிடக்கலைகளை (Architecture) அறிமுகப்படுத்திய சமூகம்,
உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்புகளை வழங்கிய இந்திய முஸ்லிம் சமூகம்,
மொகலாயர்கள் வீழ்ச்சிக்கு பிறகு ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளால், இந்தியாவின் பிளவு இந்திய முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
அன்றைக்கு இருந்த மதரசாக்களே, கல்வியில் சிறந்து விளங்கி மதவேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் கல்வி கற்கும் கல்வி நிலையங்களாக விளங்கின.
மதரசாக்களில் எல்லாவித கல்விகளும் போதிக்கப்பட்டன.
உலகின் நடைமுறைகளுக்கு தேவையான பல மொழிகள், வரலாறு,பூகோளம், கணக்கியல், பொருளாதாரம், வானவியல்,நவீன கண்டு பிடிப்புகளுக்கான அறிவியல், எனவும்,
குர்ஆன்,ஹதீஸ், இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்கள் போன்ற அனைத்தும் கற்பிக்கப்பட்டன.
அன்றைய அரசாங்கத்தில் பதவியில் இருந்த பல மாற்று சமய மக்கள் மதரசா கல்வியை கற்றவர்களாக இருந்தனர்.
இந்த நிலையில், இந்திய மக்களின் மனங்களில் இந்த மதரசாக்களின் ஆலிம்களும், மாணவர்களும், பெரும் விடுதலை உணர்வுகளை ஊட்டுவதால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடுகிறார்கள் என்று கருதிய ஆங்கில அரசு,
ஏராளமான மதரசாக்களை இடித்து தள்ளியது. அதன் ஆசிரியர்களான ஏராளமான உலமாக்களை வெளிப்படையாக குற்றம் சாட்டி தூக்கிலிட்டது.
ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களின் கல்வியறிவையும், ஆளுமைத் திறன்களையும் குலைக்க,கல்வியை சிதைக்க முடிவுசெய்து மெக்காலே என்ற அதிகாரி மூலம் பாடத்திட்டங்களை வடிவமைத்து அந்த பாடத்திட்டங்களை கற்க தூண்டினர்.
அப்போது இந்திய முஸ்லிம் சமூகம், மார்க்கக்கல்வி என்ற மதரசா கல்வி எனவும், உலகக்கல்வி என்ற ஆங்கிலேயர்களின் கல்வி முறைகள் எனவும் பிளவு பட்டது.
இந்தியாவில் பல உலமாக்கள் மிக அதிக அளவில் உலகக்கல்வியில் பட்டம் பெற்ற சிறந்த ஆளுமைகளாக திகழ்ந்தனர்.
சாதாரண மக்களிடம் கல்வியில் ஏற்பட்ட தேக்க நிலைகள், முஸ்லிம் சமூக அறிவுக் கட்டமைப்பில் மாறுதல்களை உருவாக்கின.
உலமாக்கள் ஆன்மீக கல்வியிலும், சாதாரண மக்கள் உலகக்கல்வியிலும் கவனம் செலுத்தி சிறந்து விளங்கினாலும், உலமாக்களுக்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்புகள் குறைந்து போனது.
உலமாக்களின் வழிகாட்டல் குறைந்து சமூகம் தன்னிச்சையாக செயல்படத் தொடங்கியது.
மேற்கத்திய கலாச்சாரங்களும், அதன் மோகங்களும், ஊடுறுவியதால் முஸ்லிம்களின் வாழ்வியல் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.
இதுபோன்ற நிலைகளில், சாதாரண மக்களிடம் மார்க்க அறிவு குறைந்து போனதால், வஃக்ப் போன்ற பயனுள்ள ஒரு அமைப்பை அவர்கள் முழுவதும் அறியாமல் அதன் பயன்களையும் இழந்தனர்.
இதனால் வஃக்ப்பில் ஆக்ரமிப்புகள் ஏற்படத்துவங்கின.
வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்..!
கவிஞர், கப்ளிசேட்!