வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப் -திருடர்களும்..! திருத்தங்களும்..

வஃக்ப் புரிதல் -3

ஒரு சொத்தை அதன் பயன்பாடுகளை வஃக்ப் என்னும் அர்ப்பணம் செய்துவிட்டால் அதன் உரிமையாளராக அல்லாஹ்வே ஆகிவிடுகின்றான்.

ஒருவர் வஃக்ப் செய்த சொத்துக்களை, அவரோ, அவரின் வாரிசுகளோ திரும்ப பெற முடியாது.

வஃக்ப் என்பதற்கு ஆன்மீக ரீதியாக நிலைநாட்டுதல், நிறுத்துதல் என பொருள் கொள்ளலாம். வஃக்பின் மூலம் அதன் நன்மைகளை முஸ்லிம் சமூகம் தொடர்ந்து அடையவேண்டும் என்ற நோக்கமே முதன்மையாக இருந்தது.

அந்த நோக்கங்கள் முழுமையாக நிறைவேறி இருக்கிறதா? என்பது ஆய்வு செய்ய வேண்டிய தலைப்பாகும்.

இமாம் அபூ ஹனீபா (ரஹ்..) அவர்கள், வஃக்ப் செய்பவர் ஒரு காஜி( நீதிபதி) முன்பு தனது எண்ணத்தை வெளிப்படுத்தும் போது,அவர் அதனை அங்கிகரித்து, அதற்கான ஆணை பிறப்பிக்க வேண்டும் என்கிறார்கள்.

ஆனால், வஃக்ப்பிற்கான விளக்கத்தை கூறும் இமாம் அபூ யூசுப் (ரஹ்) அவர்கள், வஃக்ப் செய்ய நினைப்பவர் அதனை வெளிப் படுத்தினாலே போதுமானது என்கிறார்கள்.

அறிஞர்களின் கருத்துக்கள் எல்லாம் வஃக்ப்பின் நன்மைகளும், பயன்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதையே மையக் கருத்தாக வெளிப் படுத்துகின்றன.

மதினா நகரில் மக்கள் நல்ல தண்ணீருக்காக சிரமப்பட்ட நிலையில், ஒரு யூதரிடமிருந்த ரூமா என்ற நல்ல தண்ணீர் கிணற்றை வாங்கி மக்களுக்கு உஸ்மான் (ரலி) அவர்கள் வஃக்ப் செய்தார்கள்.

அந்த கிணற்றில் நீர் இன்றுவரை பொங்கி பயனளிப்பதால், அதன் தொடர் நன்மைகள் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

இதுபோன்ற ஏராளமான நிகழ்வுகளை இஸ்லாமிய வரலாறு எங்கும் காணக்கிடைக்கிறது. இவையெல்லாம் இன்றைய சமூகத்திற்கு வழிகாட்டலாக இருக்கிறது.

இன்றைக்கு வஃக்ப் செய்வது மிகக்குறைந்து போனது அல்லது இல்லாமல் ஆகிப்போனது.

அதற்கான காரணங்களை யோசிக்க வேண்டும். பொருளாதார தேக்க நிலையோ, அல்லது வஃப்பை பற்றிய புரிதல்கள் இல்லாமையோ, அல்லது வஃக்ப் இன்று தவறாக பயன்படுத்தப் படுவதாலேயோ வஃக்ப் என்பது இல்லாமல் ஆகிவிட்டது.

இன்றைக்கு முஸ்லிம் சமூகம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து பள்ளிவாசல்கள்,

முஸ்லிம்களின் அறிவுக் களஞ்சியமாக கருதப்படும் மதரசாக்கள்,

முஸ்லிம்களின் மையவாடிகள், அன்று தேவைப்பட்ட வழிப்போக்கர்கள் தங்கும் சத்திரங்கள்,

வழியெங்கும் நிழல்தர நடப்பட்ட மரங்கள், மக்களின் தேவைகளுக்கான கிணறுகள் மற்றும் நீர் நிலைகள்,

ஏராளமான தர்ஹாக்கள், சூஃபிகளின் கான்ஹாக்கள்,

கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், வஃக்ப் சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருவாயில் திருமண உதவிகள், மரணித்தவருக்கு அடக்கம் செய்ய உதவிகள்,

சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல் என்று மக்களின் பயன்பாட்டு வழிகளுக்கு உதவிகள்,

மற்ற உயிரினிங்களுக்கு உணவு மற்றும் தண்ணீருக்கு உதவிகள்,

என்று ஒரு அரசாங்கத்தின் பணிகளைப் போல வஃக்பின் நோக்கங்களை, பரிமாணங்களை,(Dimensions )அறியும் போது ஆச்சரியமாக உள்ளது.

இதுபோன்ற உயரிய நோக்கங்கள் திசை மாறியது ஏன்? யார் இதனை சிதைத்தது?

வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்..!

கவிஞர், கப்ளிசேட்!

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!