வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..!
(ஒரு சிறிய தொடர்)
வஃக்ப் புரிதல் -16
நாடாளுமன்ற விவாதங்களில் பேசப்படும் கருத்துக்கள் அவைக்குறிப்புகளில் பதியப்பட்டு அது ஆவணமாக பாதுகாக்கப்படுகிறது.
சில சமயங்களில் இவர்கள் எல்லாம் பேசி என்ன பயன்? அவர்களின் பெரும்பாண்மை பலத்தில் சட்டங்களை நிறைவேற்றி சாதித்து விடுகிறார்களே என்று ஒரு போதும் மனச்சோர்வு அடையக்கூடாது.
ஒரு ஜனநாயக நாட்டின் உயர்ந்த அவையாக கருதப்படுகிற நாடாளுமன்ற பதிவுகளுக்கு எப்போதும் மரியாதையும் மதிப்பும் உண்டு.
சில சமயங்களில் தேவைப்படும் நேரங்களில் அந்த பதிவுக்குறிப்புகள் நீதிமன்றங்களுக்கு தேவைப்படலாம்.
இதுபோன்ற நாடாளுமன்ற பதிவுகள் ஒரு சட்டத்தின் போக்கையே மாற்றிவிடலாம்.
எதிர்காலங்களில் இவைகளை குறிப்புகளாக (Reference) பயன்படுத்தலாம்.
அப்போது தவறாக பேசியவர்கள், மற்றும் தவறான சட்டங்களை ஜனநாயக எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றியவர்கள் தண்டிக்கப்படலாம்.
இதுவரை இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதில்லை.
ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் இதுபோன்ற நீதிகள்(Justice) ஒருநாள் நடைபெறலாம்.
அவையில் சில சமயம் பேசப்படும் கருத்துக்கள் நீக்கப்படுகிறது. அது எதிர்காலங்களில் ஏதும் பிரச்சினைகளை உருவாக்கி விடக்கூடாது என்பதே அதன் நோக்கமாக இருக்கிறது.
ஆகவேதான் அவை குறிப்பில் பதிவதை அதற்கு சாதகமான வர்கள் ஆதரிப்பதும், எதிர்ப்பவர்கள் தங்களுக்கு பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்று எதிர்ப்பதையும் பார்க்கிறோம்.
ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பேசுவதை போராடுவதை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும்.
இதுபோன்ற சில வரலாற்று சிறப்பு மிக்க உரைகள் அதனாலேயே இன்றளவும் புகழ்ந்து பேசப்படுகிறது.
அது நாடாளு மன்றமோ, சட்டமன்றமோ, இதுபோன்ற உரைகள் மிகுந்த மதிப்பு மிக்கது.
வஃக்ப் திருத்த சட்டத்தினை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்கள் பல சிறப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்தனர்.
அதில் திமுக உறுப்பினர் ஆ.ராசா அவர்களின் உரை வரலாற்று சிறப்புமிக்கது.
இது போன்ற முஸ்லிம்களுக்காக களமாடிய உறுப்பினர்களுக்கு முஸ்லிம்கள் தங்கள் நன்றிகளை அவசியம் தெரிவிக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல சாதாரண ஊராட்சி வரை இந்த வஃக்ப் சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு நிலைகளை உருவாக்கவேண்டும். அதற்கு முஸ்லிம்கள் களமாட வேண்டும்.
அதற்காக முஸ்லிம் அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களாக இவற்றை முன்னெடுக்க வேண்டும்.
பத்திரிக்கையாளர்கள், அறிவு ஜீவிகள், பொது சமூகம் என்று இந்த வஃக்ப் சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றவேண்டும்.
மக்கள் போராட்டமாக மாற்றும் போது இதுபோன்ற மக்கள் விரோத சட்டங்களை இயற்ற அமல்படுத்த ஆட்சியாளர்கள் யோசிப்பார்கள்.
போராட்டங்களை எப்படி முன்னெடுப்பது?
வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்..!
கவிஞர்,கப்ளிசேட்!