வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..!
(ஒரு சிறிய தொடர்)
வஃக்ப் புரிதல் -15
பாசிசம் எப்போதும் மக்களை பதட்டத்திலேயே வைத்திருக்கும்.
பாசிச சித்தாந்தம் மக்களை துன்புறுத்தி தனது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துகிற கொள்கையில் பயணிப்பதால்,
நாட்டின் பொருளாதார முன்னேற்றம், வேலை வாய்ப்புகள், சமூக நல்லிணக்கம் என்று மக்கள் நலன் சார்ந்த எந்த சிந்தனையும் இல்லாமல் ஆட்சி செய்வதால் மக்களின் சிந்தனைகளை சிதறடித்து, மழுங்கடித்து,
மதப்பிளவுகளை உருவாக்கி மக்களை ஒருவித மனப்பதட்டத்தில் வைத்திருப்பது சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்தின் ஒரு உத்தியாகும் (Techniqe).
குறிப்பாக முஸ்லிம்களை குறிவைத்து ஒவ்வொரு சட்டமாக இயற்றி வரும் ஒன்றிய அரசின் சிறுபான்மை துறை அமைச்சர் கிரண்ரிஜ்ஜு அவர்கள்,
கடந்த 2024 ஆம்ஆண்டு ஆகஸ்டு 8 ம்தேதி வியாழக்கிழமை ஜனநாயகத்தின் பேராபத்தாக ஒரு மசோதாவை தாக்கல் செய்தார்.
முஸ்லிம்களின் சொந்த சொத்தான முஸ்லிம் முன்னோர்களும் மற்றும் கொடையாளர்களும் வழங்கிய, பல இலட்சம்கோடி மதிப்புள்ள சொத்துக்களை, அரசாங்கம் தனது அதிகார வரம்பிற்குள் கொண்டு வரும் முயற்சியாக இந்த வஃக்ப் திருத்த சட்ட மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளதாகவே முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைத் தவிர மற்ற எதிர்க்கட்சிகளும், அறிவுஜீவிகளும், பொதுவான மக்களும் ஒரே குரலில் இந்த வஃக்ப் சட்டத்திருத்த மசோதாவை எதிர்க்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் “வஃக்ப் (திருத்தம்) மசோதா 2024” என கிரண் ரிஜ்ஜு அவர்கள் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
அதன்படி வஃக்ப் சட்டம் 1995 என்பது, ஒருங்கிணைந்த வஃக்ப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு சட்டம் 1995 (Unified waqf management, Empowerment, Efficiency and development act) என்று அது புதிய பெயரில் மாற்றம் செய்யப்படுகிறது.
சட்டங்களை பொறுத்தவரை ஒரு சிறு திருத்தங்கள், மாற்றங்கள்,கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே குரலில் எதிர்த்தனர்.
ராகுல்காந்தி, மார்க்ஸிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், திமுகவின் ஆ.ராசா கனிமொழி இன்னும் பல தலைவர்கள் கண்டன எதிர்ப்பு உரையை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தனர்.
இது முஸ்லிம்களின் மத உரிமைகளை பறிப்பதோடு மட்டுமல்லாமல், முஸ்லிம்களின் சொத்துக்களை கையகப்படுத்தும் முயற்சி என்று கடுமையாக சாடினர்.
கனிமொழி அவர்கள் பேசும்போது, இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுக்கு எதிராகவும், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 30 க்கு எதிராக உள்ளதாக வாதிட்டார்.
கேரளாவின் முஸ்லிம் லீக் உறுப்பினர் E.T பஷீர் அஹமது அவர்கள், அரசியல் அமைப்பு சட்டம் குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு இது எதிரானது மேலும் சட்டப்பிரிவு 14,15,25,26 மற்றும் 30 க்கு எதிரானது என்று நாடாளுமன்றத்தில் கருத்துக்களை பதிவு செய்தார்.
வஃக்ப் சட்டத்திருத்தத்தில் முன் மொழியப்பட்ட பல திருத்தங்கள் “தொண்டு “என்ற கருத்தை குறைத்து மதிப்பீடு செய்யும் முயற்சியாகவும், ஆக்கரமிப்பாளர் களை சொத்தின் உரிமையாளர்களாக மாற்றும் முயற்சி என்றும் விமர்சிக்கப் படுகின்றன.
இதுபோன்ற சூழல்களில் சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொள்ளாவிட்டாலும் இதன் சிறு சிறு திருத்தங்கள் எவ்வளவு பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முஸ்லிம்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்..!
கவிஞர்,கப்ளிசேட்!