வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..!
(ஒரு சிறிய தொடர்)
வஃக்ப் புரிதல் -13
முஸ்லிம் சமூகம் இன்று குறைகளை மட்டுமே பேசி சண்டையிட்டு கொள்கிறது.
இன்றைக்கு பாசிச ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்க கொஞ்சம் கொஞ்சமாக சட்டங்களை வெளிப்படையாகவே அமல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
இன்னமும் முஸ்லிம் சமூகம் விழித்து கொள்ளவில்லை எனில் முஸ்லிம்களின் எதிர்கால சந்ததியினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி விடுவார்கள்.
இனி முஸ்லிம் சமூகம் பிரச்சினைகளை பேசி பெரிதாக்காமல், அதற்கான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும்.
இதற்கு மொஹல்லாக்களில் இருந்து முஸ்லிம் சமூகம் தன்னுடைய திட்டமிடல்களை தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு மொஹல்லாவும் மிக கட்டாயமாக மொஹல்லா ஜமாத்துகளை அமைக்க வேண்டும்.
அதில் இயங்கக்கூடிய மூத்தவர்களும் ஆர்வமான இளைஞர்களும் சமமாக இடம் பெற வேண்டும்.
அந்த மொஹல்லாவில் பள்ளிவாசல் மற்றும் தர்ஹாக்கள், கான்காக்கள் என வஃக்ப் செய்யப்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களை கணக்கெடுக்க வேண்டும்.
அந்தந்த வஃக்ப் நிறுவனங்களின் சொத்துக்களை அந்த மொஹல்லா மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
அங்குள்ள எல்லோரும் பார்க்கும் இடங்களில் சொத்துக்களின் முழு விபரங்களை எழுதி வைக்க வேண்டும்.
வாடகை, குத்தகை , அவர்களின் பெயர்கள் நிறுவனங்களின் பெயர்கள் அனைத்தையும் எழுத வேண்டும்.
சில காலங்களுக்கு முன் எழுதப்பட்ட தகவல்கள் பல இடங்களில் இன்று அழிக்கப்பட்டு இருக்கிறது.
சிறு நோட்டீஸ்கள் மூலம் மொஹல்லா முழுக்க அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் தகவல்களை பகிர வேண்டும்.
வாடகை குறைவு, குத்தகை வரவில்லை சொத்து பிரச்சினைகள் ஆகியவைகளை ஜமாத் நிர்வாகமும் அமைக்கப்பட்ட மொஹல்லா குழுவும் கலந்து ஆலோசித்து மேல் நடவடிக்கை எடுக்கலாம்.
இயங்காமல் வாய் பேச்சினால் எந்த பலனும் ஏற்படாது. மொஹல்லாவில் ஒவ்வொரு இளைஞரும் இதற்கான முன்னெடுப்பை உடனடியாக துவங்க வேண்டும்.
வருங்கால தலைமுறைகளுக்கு முஸ்லிம்களின் வஃக்ப்களும், அடையாளச் சின்னங்களும், பயனளிக்க வேண்டுமானால் இளைஞர்கள் இவற்றை முன்னெடுக்க வேண்டும்.
உலமாக்களை பொறுத்த வரை அதிகமான இடங்களில் நிர்வாகங்களின் உத்தரவுகளை மீற முடிவதில்லை.
அவர்களின் வாழ்வாதாரங்கள், அவர்களின் பணியிடங்களை சார்ந்து இருப்பதால் நிர்வாகங்களின் நிலைகள் எல்லாவற்றையும் அறிந்தாலும், அதைப்பற்றிய கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்து வதில்லை.
உலமாக்கள் தங்கள் பணியிடங்களை தாண்டி சுய வருமானங் களுக்கான வழிகளை உருவாக்கி கொண்டால்தான் அவர்கள் எல்லாவற்றையும் துணிந்து பேசவும் கருத்துக்களை தெரிவிக்கவும் முடியும்.
இருக்கின்ற வஃக்ப்களை பாதுகாக்க உடனடியாக களமிறங்கி செயல்பட வேண்டும்.
வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்…!
கவிஞர்,கப்ளிசேட்!