வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..!

(ஒரு சிறிய தொடர்)

வஃக்ப் புரிதல் -12

வஃக்ப்புக்கு கொடை வழங்குவது என்பது உலகில் வழங்கப்படும் கொடைகளிலேயே மிகச்சிறப்பான நன்மைகளை காலம் கடந்தும் தேடித்தரக்கூடிய கட்டாயமில்லாத கடமையில்லாத கொடையாகும்.

வஃக்ப் என்பது முக்கியமாக சொத்துக்களை மையப்படுத்தியே இருக்கிறது.

ஒரு சொத்தை வஃக்ப் செய்து இதுபோன்ற காரியங்களுக்கு தொடர்ந்து செலவு செய்யவேண்டும் பயன்படுத்த வேண்டும் என்று நிர்ணயித்தே கொடையாளர்கள் வழங்குகிறார்கள்.

ஆனால் வஃக்பை நிர்வகிக்கும் நிர்வாகிகள் அவர்கள் நிர்ணயம் செய்து எழுதி வைத்த நிகழ்வுகளுக்கு அதனை பெரும்பாலும் செலவு செய்வதில்லை.

சமூகத்திற்கு பயனளிக்கும் நிகழ்வுகளுக்குக் கூட அதனை செலவு செய்வதில்லை.

வஃக்ப்பின் நிர்வாகத்தில் இருக்கும் அதிகமான நிர்வாகிகள் தங்கள் சுயலாபம் கருதியே செயல்படுகிறார்கள்.

இதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் வெகு சிலரே இருக்கிறார்கள்.

வஃக்ப்பின் சொத்துக்களை வாடகைக்கு எடுத்திருப்பவர்களில் அதிகமானவர்கள், மிகக்குறைந்த வாடகைகள் கொடுத்தாலும் சிலர் சரியான வாடகையை கொடுக்கவும் செய்கிறார்கள்.

நாம் சுட்டிக்காட்டுவது பரவலாக தவறு செய்பவர்களை, வஃக்ப்பை அபகரிப்பவர்களை, வஃக்பிலிருந்து முறையற்ற பயன்களை தங்கள் அதிகாரத்தின் மூலம் அடைந்து கொள்பவர்களையே வெளிப்படையாக “திருடர்கள்” என்று விமர்சிக்கிறோம்.

பொதுச் சொத்தை உண்பவன் குல நாசம் என்ற பழைய மொழிகளை யெல்லாம் கடந்து, தவறு செய்பவன் அவனது வாழ்நாளிலேயே இந்த உலகிலேயே அதற்கான தண்டனையை அனுபவித்து விடும் காலமாக இருக்கிறது.

அல்லாஹ்வின் சந்நிதானத்தில் கிடைக்கும் தண்டனைகளின் அச்சம் இவர்களின் மனதில் ஒரு துளியும் இருப்பதில்லை.

மாறாக தாங்கள் செய்யும் செயல்களை நியாயப்படுத்த முயலுவது அதைவிட கேவலமான செயலாகும்.

இன்னும் சிலர் பதவியில் இருந்து கொண்டு பெரிதாக தவறு எதையும் செய்வதில்லை.

ஆனால் இயங்குவதே இல்லை. நான் ஊரின் பெரிய மனிதன் ஜமாத் முத்தவல்லி ஜமாத் தலைவர் என்ற பெயருக்காகவும் பிடிவாதமாக பதவிகளில் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

எங்கள் மூதாதையர் செய்த வஃக்ப்பில் நாங்கள் தான் வழிவழியாக பொறுப்பில் தொடர்வோம் என்று பிடிவாதமாக பதவிகளில் சிலர் தொடர்கிறார்கள்.

செயல்படுபவர்கள் நேர்மையானவர்கள் பதவிகளில் தொடர வேண்டும். இல்லையெனில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள பதவியிலிருந்து விலகிவிட வேண்டும்.

ஆனாலும் பிரச்சினை ஏற்படுகிற இடங்களில் எல்லாம் நீதியான நேர்மையான நிர்வாகம் நடைபெற வேண்டும் என்று சண்டை இடுவதை விட அதை அனுபவிக்க பதவிக்கு வரவேண்டும் என்றே சண்டை இடுகிறார்கள்.

நிர்வாகிகளில் பலர் அந்த மொஹல்லாவிலுள்ள சிலரை காசு பணம் கொடுத்து அருகில் வைத்துக்கொண்டு யாரையும் கேள்விகள் கேட்கவிடாமல் அச்சுறுத்துவதும் நடக்கிறது.

இதுபோன்ற இழிவான நிலைகளை களைய மொஹல்லா மக்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்க வேண்டும்.

மொஹல்லா சம்பந்தப்பட்ட வஃக்ப் சொத்துக்களை முறையாக பயன் படுத்தாவிட்டால் அதை வேடிக்கை பார்த்தவர்களும் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் குற்றவாளியாகிப் போவார்கள்.

வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்…!

கவிஞர்,கப்ளிசேட் !

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!