வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்…!
(ஒரு சிறிய தொடர்)
வஃக்ப் புரிதல் -11
தர்ஹாக்களுக்கும் ஏராளமான வஃக்ப் சொத்துக்கள் இருப்பதே பலருக்கு தெரியவில்லை.
இறைநேசர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் ஆன்மீக அறிவுரைகளாலோ அவர்களின் மருத்துவத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ பலன் பெற்றவர்கள்,
அரசர்கள் மற்றும் செல்வந்தர்கள் என பலரும் பலவகைகளில் சொத்துக்களை அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
அவர்களது மரணித்திற்கு பிறகும் பலர் சொத்துக்களை அந்த தர்ஹா நிர்வாகத்திற்கு கொடையாக வழங்கியுள்ளனர்.
இதில் பல சொத்துக்கள் வஃக்ப் வாரியத்தில் பதியப்பட்டு ஆவணங்களாக இருக்கின்றன.
பல சொத்துக்கள் நிர்வாகத்தினர் பெயரில் பதியப்பட்டு இருப்பதால் அதன் உண்மையான சொத்து விபரங்கள் யாருக்கும் தெரிவதில்லை.
இதனை நிர்வாகத்தின் வழிவழியாக வருபவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.
இதில் முறையாக வஃக்ப் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே அது முஸ்லிம் சமூகத்திறகானது என்று பேசமுடியும்.
பொது நோக்கத்திற்கு நன்மை கருதி வழங்கப்பட்டு இருந்தாலும், தனிப்பட்ட அந்த சொத்துக்களை வஃக்ப் செய்யாவிட்டால் யாரும் கேள்வி கேட்க முடியாது.
பல முக்கிய தர்ஹாக்களின் சொத்துக்கள் ஏறக்குறைய முழு ஆக்ரமிப்புகளில் இருக்கிறது.
இதுபோன்ற சொத்துக்களின் மூலம் வருமானம் வந்தாலும் அவைகளை,
அந்த தர்ஹாக்களின் பராமரிப்பு, நடைபெறும் உரூஸ்விழாக்கள் என செலவு செய்து விட்டு மீதியை என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
எந்த தர்ஹாக்களின் வருமானமும், சமூக நன்மைகளான கல்வி,மருத்துவம் மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரத் திற்கான உதவிகள் செய்வதாக தெரியவில்லை.
பல தர்ஹாக்களின் உண்டியல் வருமானங்களின் வரவு,செலவுகளும் பொதுவெளிகளில் வருவதில்லை.
பொறுப்பாளர்களின் குடும்பத்தினர்களே அதன் பங்காளர்கள் என்ற நிலையில் அந்த வருமானங்கள் முழுவதும் அவர்களே அனுபவிப்பதாகவே தெரிகிறது.
இந்தியாவில் பல தர்ஹாக்கள் எல்லா சமூக மக்களும் வந்து செல்லும் இடங்களாக விளங்குகிறது. இவைகள் எல்லாம் சமூக ஒற்றுமை என்றும் பேசப் படுகின்றன.
ஆனால் பல இடங்களில் அப்பாவி முஸ்லிம்களிடம் மட்டும் இல்லாமல் மாற்று சகோதர மக்களிடம் நேர்ச்சைகள், பரிகாரங்கள் என பணங்கள் பிடுங்கப்படுகின்றன இவைகள் எல்லாம் அந்த தர்ஹாக்களின் நிர்வாகத்தினருக்கு தெரியுமா?
வலி, வருத்தங்கள், இழப்புகள், என ஏதோ நிவாரணங்கள் கிடைக்கும் என்று நம்பி வரும் மக்களை ஏமாற்றி காசு பணங்கள் பறிப்பது வழிப்பறி கொள்ளை அல்லவா? அவர்களை கட்டுப்படுத்து பவர்கள் யார்?
இதுபோன்ற தவறுகளிலிருந்து முஸ்லிம் சமூகம் தன்னை முழுக்க விலக்கி கொள்ள வேண்டும்.
இந்தக்கருத்து தவறு எனில் சரியான கருத்தை ஆதாரங்களுடன் பதிந்தால் நமது கருத்தை தவறு என்று திருத்திக் கொள்ளலாம்.
இதுபோன்ற முஸ்லிம்களின் பொருளாதார உரிமைகளை முஸ்லிம்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்..!
கவிஞர்,கப்ளிசேட்!