வஃக்ப்-திருடர்களும்…! திருத்தங்களும்…!
வஃக்ப் புரிதல் -10
ஒரு ஜமாஅத்தின் நிர்வாகம் என்பதெல்லாம் அவ்வளவு எளிதானதல்ல.
ஒரு காலத்தில் பள்ளிவாசலின் ஜமாஅத் என்பது சுன்னத்து வல் ஜமாஅத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இருந்தது.
பிறகான காலங்களில் முஸ்லிம்களிடையே ஏராளமான கருத்து முரண்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், ஏற்பட்டது.
தவ்ஹீத் ஜமாஅத் சுன்னத்துவல் ஜமாஅத் தொழுகையாளிக்கு இடையே தொப்பி போடுவது, விரல் அசைப்பது, கால்களை அகற்றி நின்று கொள்வது, ஆண்கள் நெஞ்சில் கைகள் கட்டுவது, கூட்டு துஆக்களை புறக்கணிப்பது என்று சண்டைகள் ஆரம்பித்து காவல்நிலையம் வரை பஞ்சாயத்துகள் சென்றது.
காலம்காலமாக நடைபெற்று வரும் நடைமுறைகளில் மாறுதல்கள் ஏற்பட்ட போது அது பிரச்சினைகளாக மாறியது.
தவ்ஹீத் ஜமாஅத்தினர் பல இடங்களில் தனி பள்ளிவாசல்களை கட்டினார்கள்.
நாளடைவில் நாட்டில் பாசிச சூழல் அதிகரிக்க அதிகரிக்க அவரவரின் வழியில் அவரவர் செல்லட்டும். சண்டைகளை தவிர்ப்போம் என முடிவு செய்து பள்ளிவாசல்களில் யார் எப்படி தொழுதாலும் அது அவரவரின் வழிமுறை என்று கடந்துபோயினர்.
இதற்கிடையில் தப்லீக் ஜமாஅத் குழுவினர் பல பள்ளிவாசல்களில் தங்கி தங்களது Dதாவா பணிகளை செய்து வருகின்றனர்.
இதனையும் சில பள்ளிவாசல்களில் தப்லீக் ஜமாத்தினர் தங்கி பிரச்சாரம் செய்யக் கூடாது என பிரச்சினைகள் தொடர்கிறது.
பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு இது போன்ற பிரச்சினைகளை சுமுகமாக சமாளித்து மீள்வதே பெரும்பாடாக போய்விடுகிறது.
நிர்வாகிகளில் மூத்தவர்கள் மரணித்து விட்டால் அந்தப் பள்ளிகளின் வஃக்ப் சொத்துக்களின் நிலைகள் தெரிவதில்லை.
வஃக்ப்களுக்கான ஆவணங்கள் எல்லாம் கிடைக்காமலும் போய்விடுகிறது.
இதுபோன்ற சூழல்களில் வஃக்ப் சொத்துக்களின் நிலைகள் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.
பல ஊர்களில் பல பள்ளிவாசல்களில் கோஷ்டிகளின் சண்டைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இது எங்கள் மூதாதையர் வஃக்ப் செய்த சொத்து.ஆகவே எங்களுக்கே முழு உரிமை இருக்கிறது எனவும்,
அப்படியில்லை சரியான நிர்வாகம் செய்பவர்கள் எவரோ அவர்களிடமே நிர்வாகம் வரவேண்டும் என்றும் பரவலாக மோதல்களும் நிகழ்ந்து வருகின்றன.
இப்போது ஜமாஅத்களோடு, இன்றைய இயக்கங்கள், கட்சிகள், என கோஷ்டிகளின் பிரிவுகள் கூடிக்கொண்டே போகிறது.
இதில் பதவி என்பதெல்லாம் சுமையாக இருந்தாலும், இதையும் மீறி இவர்கள் சண்டையிட்டு கொள்வது கிடைக்கும் வருமானங்களை பங்கிட்டு கொள்வதற் காகத்தான் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இதில் சில நிர்வாகிகள் நல்ல நேர்மையான வர்களாக இருக்கலாம். அவர்களை நாம் எந்த வகையிலும் குறை சொல்லிவிட முடியாது.
ஆனாலும் நல்லவர்களாக இருக்கும் பலர் அந்த பள்ளிவாசல்களுக்கு தேவையானதை செய்யாமல் சொத்துக்களை பாதுகாக்க முயற்சிக்காமல் பெயரளவிற்கு பதவி என்று செயல்படுபவர்களும் சமூகத்தின் பார்வையில் குற்றவாளிகள்தான்.
முஸ்லிம் சமூகத்தின் இழப்புகளை எல்லோரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்..!
கவிஞர், கப்ளிசேட்