வக்ஃப் உடைமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு நன்றி கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் உட்பட உச்சநீதிமன்றத்தில் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், வக்ஃப் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு தடை விதிப்பது என்பது சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், ஒரு வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது என்றும் வாதிட்டார்.  இதையடுத்து, வக்ஃப் திருத்த சட்டத்தின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள் வக்ஃப் சொத்துக்களை வகை மாற்றம் செய்ய இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வக்ஃப் சொத்துக்களை பயனாளிகள் தொடர்ந்தாலோ, வக்ஃப் என்று அறிவிக்கப்பட்ட சொத்துக்களையோ, வக்ஃப் அல்லாத சொத்து என வகை மாற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய திருத்த சட்டத்தின்படி வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதோரை உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வக்ஃப் சொத்து மீது தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.இந்நிலையில், வக்ஃப் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளபதிவில், ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி. முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து, இந்த தீங்கிழைக்கும் திருத்தச் சட்டம் ஒன்றிய அரசால் இயற்றப்பட்டது. சட்டத்தின் பல பிற்போக்குத்தனமான விதிகளுக்கு நீதித்துறை இடைக்கால தடை விதித்ததில் மகிழ்ச்சி. இந்த இடைக்கால தடை மூலம் வக்ஃப் உடைமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!