கரூர் மரணங்களின் வேதனையும், வலியும்! எனும் தலைப்பில், தென்காசி மாவட்ட எழுத்தாளர் ஆலடி எழில் வாணனின் இரங்கல் பதிவினை இங்கு பதிவு செய்கிறோம். நேற்று (27.08.25) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூரில் நடைபெற்ற கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி தற்போதைய நிலவரப்படி 39 பேர் மரணம் அடைந்துள்ளனர். பலர் காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொலைக் காட்சியிலும், செய்தித் தாள்களிலும், சமூக ஊடகத்திலும் வரும் இந்த சம்பவத்தைப் பற்றிய செய்திகள் மற்றும் காணொலிகள் நமக்கெல்லாம் வேதனையையும், வலியையும், இது நடந்திருக்கவே கூடாது என்ற ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது.
இயற்கைப் பேரிடரால் ஏற்படும் இழப்புக்கு நாம் ஆறுதல் சொல்லி நகரலாம். ஆனால், நம்முடைய அணுகுமுறை, அஜாக்கிரதை, எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு, நேர ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு இல்லாத மனிதத் தவறுகளால் ஏற்படும் இது போன்ற விபத்துகளினால் நிகழும் உயிர் இழப்புகளை நாம் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது. ஒரு அரசியல் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்து 39 பேர் இறந்திருப்பது தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும் என்ற வேதனையும், வலியும், ஆதங்கமும் மேலோங்குகிறது.
உயிரிழந்த குடும்பங்களுக்கு நாம் ஆறுதல் சொல்லலாம், ஆதங்கப் படலாம், நிவாரணம் வழங்கலாம், இருந்தாலும் இந்த இழப்பு அவர்களின் வாழ்நாள் துயரமாக, வலியும், வேதனையும் மிகுந்து இருக்கும் என்பது தான் நிதர்சனம். இதற்கு நம்மிடம் உடனடியாக எந்தத் தீர்வும் இல்லை என்பது தான் வேதனையும் கூட. இது இப்படி நடந்திருக்கலாம், அது அப்படி நடந்திருக்கலாம் என்பதெல்லாம் இனி வரும் காலங்களுக்கு வேண்டுமானால் ஒரு பாடமாக இருக்கும்.
மூன்று கருத்துகளை இந்த இரங்கல் பதிவில் பதிவு செய்கிறேன். முதலாவதாக, இனி வரும் காலங்களில் அரசியல் கட்சிகள் இது போன்று பிரம்மாண்டமாக, கட்டுக்கடங்காத கூட்டத்தைக் காட்டித்தான் மக்களைக் கவர வேண்டும் என்று நினைக்காமல், தங்களது ஆழமான கருத்துக்கள் மற்றும் அழகிய செயல்பாடுகளால் மக்கள் ஆதரவை பெறலாம். செல்லும் இடத்திற்கு ஏற்ப எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சூழலுக்கு ஏற்ப தனித்தனியாக, நிகழ்ச்சிகளை நடத்திக் கூட தங்கள் செல்வாக்கை கருத்தை மக்களிடத்தில் எடுத்துச் செல்லலாம்.
இரண்டாவதாக, பிரச்சாரத்தின் போது தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்கள் நேர ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது மிக அவசியம். நேற்றைய நிகழ்வுக்கு நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இரண்டு இடங்களிலுமே நிகழ்ச்சி நடத்துபவர் பல மணி நேரம் தாமதமாக வந்ததை ஒரு மிகப்பெரிய குறைபாடாகவே நான் பார்க்கிறேன். மதியம் 12.30 மணிக்கு வர வேண்டிய இடத்துக்கு, ஒரு நபர் மாலை 7.00 மணிக்கு வந்தால் அங்கு காத்திருக்கும் மக்கள் எவ்வளவு சோர்வு அடைந்து இருப்பார்கள், அந்த இடத்தில் கூட்ட நெரிசலால் எவ்வளவு அவதி ஏற்பட்டிருக்கும் போன்றவற்றை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. ஒரு சில நொடிகளில் ஏற்படும் பதட்டமும் இது போன்ற பேரிழப்புக்குக் காரணமாகிறது என்பதையே நேற்றைய நிகழ்வு உணர்த்துகிறது. மற்றவர்களின் நேரத்தை சாதாரணமாகத் நினைத்து வீணடிக்கிறார்கள். இந்தப் போக்கை மாற்ற வேண்டும். ஒரு நிகழ்ச்சிக்குக் குறிப்பிட்ட நேரத்தை விட அரை மணி – ஒரு மணி நேரம் தாமதமானால் பரவாயில்லை, ஆனால், பல மணி நேரம் தாமதம் என்பது தவறு மற்றும் விபத்துக்கு வழிவகுக்கிறது.
மூன்றாவதாக குறிப்பாக, அரசியல் ஆர்வம் உடையவர்கள் குழந்தைகளையும், சிறுவர்களையும், முடிந்த அளவுக்குப் பெண்களையும் இது போன்ற கூட்ட நெரிசலான இடத்திற்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கரூர் கோர நிகழ்விற்கு இவர்தான் குற்றவாளி, அவர்தான் குற்றவாளி என்று சமூக ஊடகத்தில் நடக்கும் வாதங்களைப் புறம் தள்ளிவிட்டு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்து இனி நடக்காதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தையும் ஆழமாக பதிவு செய்து, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிஜம் வேறு! நிழல் வேறு! வாழ்க்கை என்பது சினிமா அல்ல! அரசியல் என்பது படப்பிடிப்பு அல்ல! அரிதாரம் என்பது அதிகாரம் அல்ல! கரூர் துயரம் கண்களைத் திறக்கட்டும் என்றார் கவிஞர் பழநி பாரதி.
-எழுத்தாளர் ஆலடி எழில்வாணன்.


You must be logged in to post a comment.