40வது கண்தான விழிப்புணர்வு வாரவிழா..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 40-வது கண்தான விழிப்புணர்வு வாரவிழா நடந்தது. இவ்விழாவின் ஒரு பகுதியாக கண் பிரிவு வெளி நோயாளிகள் பகுதியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் மரு.செல்வ பாலா ஆகியோர் தலைமையில், கண் மருத்துவர் ராஜலட்சுமி கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் தலைமையில், மூத்த கண் மருத்துவர் மரு.ராஜலட்சுமி, மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலிய மாணவிகளுக்கு கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல வகையான போட்டிகளை நடத்தினர். ஓவியப்போட்டி கவிதை போட்டி மற்றும் பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், பொதுமக்களிடம் கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிற்றேடுகள் வழங்கப்பட்டது. இந்த சிற்றேடுகளில் கண் தானம் பற்றிய முழு விவரங்கள் மற்றும் அதன் பலன்கள் போன்றவை தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்விழாவில் கண் மருத்துவர், கண் மருத்துவப் பகுதி உதவியாளர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள், செவிலிய மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் பேசுகையில், விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம்! கண் தானம் செய்வோம்! தானங்களில் சிறந்தது கண்தானம். போதுமான விழிப்புணர்வு இல்லாமல் தினமும் எத்தனையோ உடல்கள் கண்களோடு கருவிழிகளோடு புதைக்கவோ எரிக்கவோ படுகின்றன. அனைவரும் கண் தானத்திற்கு முக்கியத்துவம் அளிக்க முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்களை பதிவு செய்தார். கண் தானத்தின் அவசியம் குறித்தும் அது எப்படியெல்லாம் செய்யப்படுகிறது என்பது குறித்து விளக்கி பேசினார்.

 

மேலும், பொது மக்கள் அனைவரும் கண் தானம் செய்வதற்கான வசதிகள் அரசால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்தி அரசு இணைய தளம் மூலமாக (https://tnehms.tn.gov.in/e-services) பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். விழாவின் முடிவில் கண் மருத்துவர் ராஜலட்சுமி பரிசு வழங்கி ஊக்கப்படுத்திய மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு நன்றியினை தெரிவித்தார். இந்த விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்த கண் மருத்துவர் மற்றும் கண் மருத்துவ பிரிவில் உள்ள பணியாளர்கள் அனைவரையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். இவ்விழாவில் பங்கேற்ற பொது மக்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் அனைவரையும் பாராட்டி நன்றி தெரிவித்தார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!