ஈரோடு மாவட்டத்தில் துப்பரவு பணியாளர் பணியின் போது மாரடைப்பால் மரணம் சக பணியாளர்கள் அதிர்ச்சி..
பவானி அடுத்த அம்மாபேட்டை அருகேயுள்ள நெரிஞ்சிப்பேட்டையச் சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் பாலன் (45), இவர் கடந்த 13 ஆண்டுகளாக நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.
தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் இவர் இன்று காலை பவானி மேட்டூர் சாலையில் நெருஞ்சிப்பேட்டை அங்காளம்மன் கோயில் தெருவில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதைக் கண்ட சக தொழிலாளர்கள் பேரூராட்சி குப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ள பணியாளர்கள் பாலனை பரிசோதித்தனர்.
இதில் பாலன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது இத்தகவலறிந்த தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் வாகனத்தில் பாலனின் சடலம் ஏற்றப்பட்டு நெரிஞ்சிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
கரோனா வைரஸ் தடுப்பு பணியில் பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


You must be logged in to post a comment.